Sunday 25 March 2018

பாலைக் கறக்க இயந்திரங்கள் :

1. இயந்திரங்கள்
2. இயந்திரம் வாங்கும் முன் கவனிக்கப்படவேண்டியவை

இயந்திரங்கள்
காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கின்றது. நேற்று எளிமையானது என நினைத்த வேலைகள் இன்று கடினமாகிவிட்டன. கடினம் என்று நினைத்த வேலைகள் சுலபமாகிவிட்டன. காலத்தின் இந்த சுழற்சியால்தான் அம்மிக்கல் மிக்ஸியானது, ஆட்டுக்கல் கிரைண்டரானது, விறகடுப்பு, எரிவாயு அடுப்பானது. வீட்டையே இத்தனை சின்னச் சின்ன இயந்திரங்கள் வந்து ஆக்கிரமிக்கும்போது பண்ணையிலும் சின்னஞ்சிறிய பண்ணை இயந்திரங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போகின்றது.

காலைப் பனியில் எழுந்து, நீராடியபின் சாமியைக் கும்பிட்டு, சொம்புடன் புறக்கடைக்குச் சென்று, பசுவின் வாலையும் மடியையும் தொட்டு வணங்கி, கன்றை அவிழ்த்து மடுவில் மோதவிட்டு, பாலை இறக்கச் செய்து, குத்தவைத்து அருகமர்ந்து விரல் மடக்கி நுரை பொங்க சொம்பு நிறையப் பால் கறக்க இன்றைக்கு எத்தனைப் பேருக்குத் தெரியும்? ‘வாக்கிங் போகும்போது பூத்ல பால்பாக்கெட் வாங்கிட்டு வந்திருங்க’ எனப் பையையும் கூப்பனையும் கையில் கொடுக்கும் இல்லத்தரசிகள்தான் ஏராளம். பால் பாக்கெட்டுக்கு மாறிவிடவும் பால் உற்பத்தி புறக்கடையிலிருந்து பண்ணைக்குப் போய்விட்டது. தனிப்பட்ட வீட்டுப் பயன்பாட்டிற்கு மட்டும் பால் வளர்க்கும் கலாசாரம் வழக்கொழிந்துவிட்டது. பால் வணிகமும் வீட்டை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டது.

பால் பசு வளர்ப்போராவது நிம்மதியாக இருக்கின்றனரா என்றால் கறவைப் பசுக்களையும், எருமைகளையும் பராமரிப்போர் பால் கறவையாளருடன் படும் இன்னல் சொல்லி மாளாது. பால் கறவை என்பது தனித் திறனுடைய பணி, விரல் மடக்கி காம்பில் அழுத்தம் கொடுத்து இரண்டு கைகளால் நான்கு காம்புகளிலும் மாற்றி மாற்றி சுழற்சி முறையில் வேகம் குறையாமல் பால் கறந்தால் மட்டுமே முழுப்பாலையும் பசுவிடமிருந்து கறக்க முடியும். அதிக உற்பத்தித் திறனுடைய நவீன பசுக்களிடமிருந்து பாலைக் கறக்க தனித்திறன் வேண்டும். பால் கறவைக்காரர்களுடன் பண்ணையாளர்கள் படும்பாட்டை பெரும் காப்பியம் எழுதினாலும் விளக்க முடியாது. அவ்வளவு இன்னல்கள். இந்தப் பால் கறவையாளர்களால் வருகின்ற இன்னல்களுக்குத் தீர்வுதான் பால் கறவை இயந்திரங்கள்.

பால் கறவை இயந்திரத்தைப் பயன்படுத்தி பால் கறக்கும்போது மடுவில் பால் தீர்ந்துவிட்டால் ரத்தத்தையும் சேர்த்து உறிஞ்சிவிடும் என்கின்ற மூடநம்பிக்கை படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இருக்கத்தான் செய்கின்றது. மனிதன் எப்படி கைகளால் பால் கறக்கின்றானோ அதனை இயந்திரம் அப்படியே செய்கின்றது. மனிதன் கறக்கும்போது வராத ரத்தம் இயந்திரத்தில் கறக்கும்போது வந்துவிடும்? இது முற்றிலும் மூடநம்பிக்கையேயன்றி வேறில்லை. பால் கறவை இயந்திரத்தினைப் பயன்படுத்தி பால் கறப்பதால் பண்ணையில் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன.

1. அழுக்கான, கழுவப்படாத, நகம் வெட்டப்படாத கைகளுடன் பால் கறக்கவரும் பால் கறவையாளர் மூலம் ஒரு பசுவிலிருந்து இன்னொரு பசுவிற்கு நோய் தொற்று எளிதாகப் பரவுகின்றது. கறவை இயந்திரங்களைப் பயன்படுத்தினால் நோய் பரவுவது தவிர்க்கப்படுகின்றது. குறிப்பாக மடிநோய் எனும் மாபாதக நோய் தவிர்க்கப்படுகின்றது.

2. தினசரி குறிப்பிட்ட நேரத்தில் கறந்து குறித்த நேரத்தில் விற்பனைக்கு அனுப்புவது மிகவும் முக்கியம். அடிக்கடி நேரம் மாற்றி மாற்றி பால் கறப்பதால் பசு கறக்கும் பாலின் அளவு கூடிக் குறைகின்றது. பால் விற்பனைக் கணக்கீடு பாதிக்கப்படுவதுடன் பசுவிற்கும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். அதிகபடியாக பால் கொடுக்கும் பசுக்கள் நேரத்தில் பால் எடுக்காமல் தாமதித்தால் பால் காம்புகளிலிருந்து அதுவாகவே பால் வெளியேறும். பால் மடி நிறைய பால் தங்கியிருப்பது பசுவிற்கு நிலைகொள்ளாமையை ஏற்படுத்தி உளைச்சலையும் ஏற்படுத்தும். தினசரி குறிப்பிட்ட நேரத்தில் பால் கறவையாளர் வருவது தவறினால் இந்த சூழல் ஏற்படும். இதற்கு ஒரே மாற்றுத் தீர்வு பால் கறவை இயந்திரங்கள்.

3. கைகளால் பால் கறக்கும்போது கறவையாளர்களின் கைவிரல் நகம் பட்டு பசுக்களின் மென்மையான காம்புகளில் காயம் ஏற்படுகின்றது. தினசரி இரண்டு முறை பால் காம்புகளைத் தொடவேண்டி இருப்பதால் பால் காம்புகளில் புண் ஏற்பட்டுவிட்டால் புண் ஆறுவது மிகவும் சிரமான விஷயம். இதனால் பாலுடன் காம்பிலிருக்கும் புண்களிலிருந்து வரும் ரத்தம் கலக்க நேரிடுகின்றது. வாய் அகன்ற மூடப்படாத பாத்திரங்களில் பால் கறக்கும்போது பசுவின் சீழ்ப் பகுதியில் ஒட்டியுள்ள சாணம், தூசு, ஈக்கள் போன்றவை பாலில் விழுகின்றது. ஆனால் மூடியுடன் கூடிய காற்றுப்புகாத பால்கேனின் துணை கொண்டு பால் கறக்கும்போது பாலைத் தவிர வெளிப் பொருட்கள் பாலில் கலப்பதற்கான வாய்ப்பே இல்லை.

4. அதிக அளவில் பால் கறக்கும் பசுக்களிலிருந்து பால் முழுவதையும் கறக்காமல் சிறிதளவு பாலை பசுவின் மடுவின் தங்கவிடுவதனால் எஞ்சிய பாலினால் மடிநோய் எனும் கொடிய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இறுதியாக கறக்கப்படும் பாலில்தான் கொழுப்பு, கொழுப்பு இல்லாத ஒரே திடப் பொருள் (SNF) அதிகம் உள்ளது. இந்த கடைசிப் பாலையும் சேர்த்து கறந்தால் மட்டுமே கொழுப்பு, எஸ்.என்.எப் அளவு கூடி பாலுக்குத் தரம் உயர்ந்து விலையும் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

5. விரலை மடக்கி விரல் முட்டியால் அழுத்தம் கொடுத்து பால் கறப்பதால் பால் காம்புகளுக்கு தேவைக்கு மேல் அழுத்தம் ஏற்படுகின்றது. இதனால் பால் காம்புகளின் நுண்ணிய திசுக்கள் பாதிக்கப்படுகின்றது. மேலும் பால் கறவையாளர்கள் பால் கறக்கும்போது ஒரே சீராக அழுத்தம் கொடுத்து வேகமாகப் பால் கறப்பதில்லை. இதனாலும் பால் கறக்கும் அளவு மாறுபடுகின்றது. பால் கறவை இயந்திரத்தில் உள்ள பல்சேட்டர் எனும் அமைப்பு ஒரே சீராக இடைவெளி கொடுத்து பல்சேஷன் எனும் சக்தியை வெளிப்படுத்துவதால் ஒரே சீராக காம்புகள் அழுத்தப்படுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர ரப்பர் குழாய்கள் காம்புகளை மிக மென்மையாக கையாள்வதால் பால் கறப்பதைப் பசுக்கள் சுகமாக உணர்கின்றன.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

இயந்திரம் வாங்கும் முன் கவனிக்கப்படவேண்டியவை :

1. முதலில் கவனிக்கப்பட வேண்டியது நமது பண்ணையில் உள்ள கறவைப் பசுக்களின் எண்ணிக்கை. குறைந்தபட்சம் எத்தனை? அதிகபட்சம் எத்தனை? விரிவாக்கம் செய்யும் திட்டம் உண்டா? இந்த எண்ணிக்கையின் அடிப்படையில்தான் நமக்கு என்ன மாதிரியான கறவை இயந்திரம் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இயலும்.

2. நமது பண்ணையில் மின்வசதி உள்ளதா? தடையில்லா மின்சாரத்திற்கு வாய்ப்பு உள்ளதா? UPS அல்லது ஜெனரேட்டர் வசதி இருக்கின்றதா?

3. நம்மால் தினசரி இரண்டு வேளை இயந்திரத்தை இயக்கி பால் கறக்க இயலுமா? தினசரி கழுவி காயவைத்து சுத்தமாக பராமரிக்க இயலுமா? பால் கறவை இயந்திரத்தில் சின்ன சின்ன பராமரிப்புப் பணிகளை நாமே செய்துகொள்ள முடியுமா?

4. ஒரு நல்ல பால் கறவை இயந்திரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை நம்முடைய தேவை, வசதி போன்றவற்றை மனதில் கொண்டு நாமே யோசித்து முடிவு செய்ய வேண்டும். தான் வாங்கியதுதான் சரி. தனது தேர்வே சரியானது என சொல்லும் நபர் அதிகமுள்ளனர். ஒரு பிரபல பன்னாட்டு பால் மெஷின் நிறுவனம் ஆரம்பக் காலத்தில் விற்பனை செய்த விலைக்கும், இப்போது விற்பனை செய்யும் விலைக்கும் சம்பந்தமே இல்லை. பொதுவாக நாளுக்கு நாள் விலைவாசி ஏறிவரும் இந்தக்காலத்தில், மக்களுக்கு விழிப்புணர்வு பெருகி, போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், இந்த நிறுவனம் பால் இயந்திர விலை மட்டும் குறைந்துகொண்டே வருகிறது. நமக்கான கறவை இயந்திரம் பிரபல பிராண்டாக மட்டும் இருந்தால் போதாது. விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்பு, சேவை தடையில்லா உதிரி பாகங்கள் சப்ளை மிக முக்கியம். ஏனென்றால் பால் கறவை இயந்திரங்களின் சில பாகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்பட வேண்டும். ஆயில், சில சிறிய பொருட்கள் தேவைப்படும். ஒரு பால் இயந்திர விற்பனையாளரின் நிறுவனம் ஒரு ‘ஒன்மேன் ஷோ’. அவர் ஒவ்வொரு விடுமுறையிலும் குடும்பத்துடன் உல்லாச பயணம் புறப்படுவார். அப்போது அவரிடம் இருக்கும் உதிரி பாகங்களை காரில் அள்ளிப்போட்டுக்கொள்வார். அவரின் பயண வழியிலுள்ள வாடிக்கையாளர்களிடம் சென்று தேவையோ இல்லையோ பராமரிப்பு செய்கின்றேன் என கையில் கொண்டு வந்த ஸ்பேர்களைப் போட்டு ஒரு கணிசமான தொகையை கறந்துவிடுவார். கறவை இயந்திரத்தைவிட இவர் நன்றாக கறப்பார். இவரின் இந்த வியாபாரத்திறன் அலாதியானது. ஆகவே மார்கெட்டில் நிலையாக உள்ள நேர்மையான அனுபவமுள்ள விற்பனையாளரைத் தேர்வு செய்ய வேண்டும்.

5. நல்ல பால் கறவை இயந்திர உற்பத்தியாளர்கள் இத்தாலி, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் இருக்கின்றனர். நமது நாட்டில் தரமான இயந்திரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. விலையும் அதிகம். இத்தாலிய உற்பத்தி மிக மிக அதிக விலை. சாமான்யர்களை எட்டாது. துருக்கி இயந்திரம் நல்லது. இப்போது சீன தயாரிப்பு இயந்திரங்களும் துருக்கி தயாரிப்புக்கு இணையாகக் கிடைக்கின்றது. அநேக பன்னாட்டு நிறுவனங்கள் இன்று தங்களது பொருட்களை சீனாவிலும், தைவானிலும்தான் தயாரிக்கின்றன. பெயர் மட்டும்தான் அவர்களுடையது. எனவே சீன தயாரிப்பு என்றவுடன் பயம் வேண்டாம்.

ஒன்று, இரண்டு சமயத்தில் மூன்று பால் மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள்தான் பாவப்பட்ட ரகம். பால் மாடு இல்லாமல் இருக்கவும் முடியாது, பெரிய பண்ணையாளர்கள் போன்று நிறைய முதலீடும் செய்ய முடியாது. ஆனால் பெரிய பண்ணையாளர்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளும் இவர்களுக்கும் உண்டு. அந்த மாதிரி ஆட்களுக்கு ஏற்றதுதான் கைகளால் இயங்கும் பால் கறவை மெஷின்.

1. இதற்கு மின்சாரம் தேவையில்லை
2. சிறிய பண்ணைகளுக்கு ஏற்றது
3. முதலீடும் குறைவானதே
4. கையாள்வது சுலபம்
5. பராமரிப்பதும் எளிது

தமிழகத்திலும், கர்நாடகத்திலும் இந்த வகை கையால் இயங்கும் பால் உறிஞ்சும் (ஆமாங்க பால் கறப்பதில்லை, இவை உறிஞ்சத்தான் செய்கின்றன) இயந்திரங்கள் விற்கப்படுகின்றன. இந்த இயந்திரம் கொண்டு பால் உறிஞ்சப்படுவது மாடுகளுக்கு கெடுதல் மட்டுமல்ல அது பாவமும்கூட. இதுபோன்ற சப்பும் உணர்வு பசுக்களுக்கு வந்தால்தான் இயல்பு. ஆனால் இதுபோன்ற கை கறவை பால் மெஷின்களை நீங்கள் இயக்கும்போது பால்கேனுக்குள் வெற்றிடம் உருவாகி பாலை உறிஞ்சும் நிலை உருவாகிறது. பாலை உறிஞ்சும்போது காம்பு, மடுவில் உள்ள நுனி திசுக்கள் கணிசமாக சேதமடைந்து நாளடைவில் பசுக்களுக்குக் கெடுதல் உண்டாக்கும்.

கைகளாலும் இயக்க வேண்டும் ஆனால் பசுக்களுக்கு கேடு நேரிடக்கூடாது என்பதற்கு ஒரு புதிய மாற்று வழி இருக்கிறது. படத்தில் பார்ப்பது நியூமாட்டிக் பிளீடன் பொருத்தப்பட்ட கைகளால் இயக்கும் பால் கறவை இயந்திரம். இந்த பிஸ்டன் உள்ளே ரப்பர் ஓரிங்குகள் பொருத்தப்பட்டு உள்ளதால் பிஸ்டனை இயக்குவது மிக எளிது. இதை மிக சுலபமாக கையாளலாம். பசுவின் மடுவில் பொருத்தக்கூடிய யூனிட்டும் மிகத் தரமாக இருக்கின்றது. பால் சேகரிக்கப்படும் பால்கேனும் சுலபமாக கையாள்வதற்கு ஏற்றவாறு எவர்சில்வரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த இயந்திரத்தில் மெக்கானிக்கல் பல்சேஷன் இருக்கின்றது. இந்த மெக்கானிக்கல் பல்சேஷன் பால் காம்புகளை இதமாக அழுத்திப்பிடித்து பாலை கன்றுகள் சப்பிக்குடிப்பது போலவே அழுத்தி பாலை வெகு இயல்பாக கறந்துவிடுகின்றது. கைக் கறவை இயந்திரத்தின் மிகப்பெரிய தவறும், குறைப்பாடுமான உறிஞ்சும் தன்மை நீக்கப்பட்டு மெக்கானிக்கல் பல்சேஷன் அமைப்பால் பாலை இயல்பாக கறக்கும் தன்மை ஏற்படுகின்றது. சிறிய அளவில்தான் பசு வளர்க்க இயலும் என இருப்போருக்கு இந்தக் கை கறவை இயந்திரம்தான் சரியாக இருக்கும். இதில் பராமரிப்பு என்பது சுத்தம் செய்வது மட்டும்தான். மற்றபடி வழக்கமான தேய்மானமும், ரப்பர் மாற்றும் செயல் மட்டுமே. இந்தவகை இயந்திரம் கொண்டு அதிகபட்சம் மூன்று பசுக்களுக்கு மேல் பால் கறக்க முடியாது.

இதே வகை இயந்திரத்தை தினசரி இரண்டு முறை கைகளால் இயக்கி பால் கறக்க சிரமப்படுவர்களுக்காக இதே இயந்திரம் ¼ குதிரைசக்தி திறனுள்ள சிறிய மின் மோட்டார் பொருத்தி இயங்குமாறும் வடிவமைக்கப்படுள்ளது. இந்த மின்மோட்டார் கைகளால் இயங்கும் வேகத்திலேயே இயங்குவதால் வேலை சுலபமாகிறது. ¼ HP மோட்டார் என்பதால் இந்த மோட்டாரை வீட்டு UPS லும் இயக்க முடியும். கையால் இயக்கும் இயந்திரத்தை வாங்கிய புதிதில் எல்லோரும் ஆர்வமாகவே பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறிது காலத்திலேயே கைகளால் இயக்குவதற்கு அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகின்றது. இதுபோன்றவர்களுக்காகவே கைகளால் இயக்கும் பால் கறவை இயந்திரத்தில் குறைந்த அளவு மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் அதுபோன்ற இயந்திரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறிய பண்ணையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து அவர்களின் பட்ஜெட்டுகளுக்குள்ளும் அடங்கிவிடுகிறது.

அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் நடுத்தரமா 4 முதல் 9 பசு வரைக்கும் வைத்திருப்பவர்கள் எந்த வகையான கறவை இயந்திரம் வாங்குவது? நடுத்தர வர்க்கம் என்று ஒரு வர்க்கம் உலகம் பூராவும் இருந்துகொண்டு அல்லாடுது. கீழேயும் போக முடியாது, மேலேயும் போக முடியாது. கீழே உள்ளவன் அளவுக்குத்தான் வசதியை அனுபவிப்பார்கள், ஆனால் மேலே உள்ளவன்போல நடந்துகொள்வார்கள்... இதுதான் எதார்த்தம். பால் பண்ணை தொழில் மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சிறிய பண்ணையாளர்களுக்கு உள்ள அளவே வசதி ஆனால் பெரிய பண்ணையாளர்களுக்கு உள்ள கஷ்டம் அனுபவிப்பர். கைகளால் பால் கறக்கும் இயந்திரம் போதாது ஆனால் அதே சமயம் பெரிய இயந்திரம், பெரிய முதலீடும் தேவையில்லை.

இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வுதான் பிஸ்டன் டைப் பால் கறவை இயந்திரம். சின்னஞ்சிறிய அமைப்பு, எளிதாக உருட்டி பசுவின் அருகில் கொண்டுசென்று பால் கறக்கலாம். இது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் பிளின்டன்போல பெரிய சைஸ் அளவில் மின்சார மோட்டாரினால் இயக்கப்படுகின்றது. இந்த பிஸ்டன் மேலும் கீழுமாக சென்று இயங்கும்போது பால் கேனில் உள்ள காற்று உறிஞ்சப்பட்டு வெற்றிடம் உருவாகின்றது. பசுவின் பால் காம்புகளின் செட்டை மாட்டியதும் வெற்றிடத்தை நோக்கி பால் வருகின்றது. பாலை உறிஞ்சாமல் கறப்பதற்காக இந்த மெஷினில் மெக்கானிக்கல் பல்சேட்டர் அமைப்பு உள்ளது. அதனால் பசுக்களுக்கு அதன் கன்று பாலை சப்பிக் குடிப்பது போன்ற உணர்வுடன் பால் கறக்கப்படும்.

இந்த இயந்திரத்தில் உள்ள தோல் வாசரை அடிக்கடி கவனிக்க வேண்டும். தேவைப்படும்போதெல்லாம் கிரீஸ் போன்ற உயவுப் பொருள் தடவ வேண்டும். பால் கறந்து முடிந்ததும் பால் கறக்கும் கிளஸ்டர் அசௌம்ளியை வாளி தண்ணீரில் மூழ்கவைத்து மெஷினை ஓடவைத்து தண்ணீரை உறிஞ்சவைத்து பால் கறவை இயந்திரத்தின் உள்பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த மெஷினைக் கொண்டு அதிகபட்சம் 8, 9 பசுக்கள் வரை பால் கறக்கலாம். பால் கேன் பெரியது அதனால் ஒவ்வொரு பசு கறந்ததும் கேனைத் திறந்து பாலை வேறு பாத்திரத்தில் ஊற்ற வேண்டியது இல்லை. அதென்ன அவ்வளவு சிரமமான காரியமா என கேட்காதீர். ஆரம்பத்தில் எளிது போன்று தோன்றும் சின்னஞ்சிறு வேலைகள் தினசரி செய்யும்போது மாலைபோல தெரியும். அதனாலென்ன சின்ன வேலைதானே என நினைத்துவிடாமல் நமக்கு தேவையான அதோடு வசதியான பால் கறவை இயந்திரத்தை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

அடுத்தது பெரிய பண்ணையாளர்களுக்கான பால் கறவை இயந்திரம். இது இரண்டு பகுதியைக் கொண்டது. ஒன்று இயந்திரப் பகுதி மற்றொன்று கறவை யூனிட். இதுவரை பார்த்த இயந்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்து. படத்தில் காணப்படுவது இயந்திரப் பகுதி. இதனை பண்ணையின் ஒரு இடத்தில் நிலையாக பொருத்திக்கொள்ள வேண்டும். இது மின்சாரத்தால் இயங்கும். மின்சாரம் இல்லையென்றால் மாற்று சக்தியாக பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கம்ப்ரசர் இயக்கப்படுவதால் பால் கேன்களில் வெற்றிடம் உருவாக்கப்பட்டு பால் கறவை நடைபெறுகிறது.

இந்த இயந்திரத்தில் இருந்து நமது கால்நடைகளை கட்டியிருக்கும் தொழுவம் அல்லது பால் கறக்க உத்தேசித்துள்ள பகுதிக்கு பிவிசி பைப்புகள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பால் கறவை செய்ய தேவையான பகுதிகளில் இணைப்பிற்கான பட்டர்பிளை வால்வு பொருத்திக்கொள்ள வேண்டும். இதில் ஒரே சமயம் ஒன்று முதல் மன்று பசுக்கள்வரை பால் கறக்கலாம். ஒவ்வொரு பசுவாக மாற்றி மாற்றி மாட்டி மிக விரைவில் பால் கறக்க முடியும். இது 8 பசுக்களுக்கு மேல் உள்ள பால் பண்ணைகளுக்கு ஏற்றது. இதில் உள்ள ஒவ்வொரு பால்கேனின் மூடியிலும் பல்சேசன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது பல்சேசன் வேலையை பார்த்துக்கொள்ளும். இந்த பல்சேட்டம் டயாபரம் வகையைச் சேர்ந்தது. இது கொஞ்சம் சென்சிட்டிவான பல்சேட்டம். நாமே திறந்து ஆராய்ச்சி செய்து பார்ப்பது கெடுதலில் முடியும். தேவைப்பட்டால் அனுபவம் மிக்க தொழில்நுட்ப உதவியாளர்களைக் கொண்டு சரி செய்ய வேண்டும்.

இயந்திரத்தினை இயக்கிவிட்டு பிரஷர் உருவானதும் பட்டர்பிளை வால்வில் ஹோசை பொருத்த வேண்டும். வால்வை திறந்ததும் பால்கேனில் வெற்றிடம் உருவாகிவிடும். பால் கறவை அசெம்பிளியை பசுவின் மடுவிற்கு அருகில் வைத்ததும் வேக்குவம் மூலம் பால் காம்புகளில் ரப்பர் பகுதி இணைந்துகொள்ளும். பால் வருவது கண்ணாடி போன்ற பகுதியில் தெரியும். பால் வருவது நின்றவுடன் அடுத்த பசுவிற்கு செட்டை மாற்றலாம். ஒரே சமயத்தில் மூன்று பசுவரை கறப்பதால் வேலை மாறி மாறி நடந்து விரைவில் பால் கறக்கும் வேலை முடியும்.

இந்த கறவை இயந்திரத்தில் உள்ள கம்ப்ரசர் ஆயில் லெவல் கவனிக்க வேண்டும். ஆயில் லீக் ஆகாமல் கவனமாக கையாள வேண்டும். ஆயில் லெவல் குறைந்தால் ஆயில் ஊற்ற வேண்டும். பால் கேன்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கழுவுவதற்கு அதற்கென சோப் ஆயில் உள்ளது. இந்த ஆயில் கலந்த தண்ணீரில் கறவை யூனிட்டை மூழ்கவைத்து மெஷினை இயக்கினால் சோப் ஆயில் உட்புறம் சென்று சுத்தப்படுத்தும். பின்னர் சுத்தமான தண்ணீரையும் அதேபோல உறிஞ்சவைத்து கழுவ வேண்டும். சோப் ஆயில் கிடைக்கவில்லையென்றால் குளிக்கப் பயன்படுத்தும் ஷாம்பூவை பயன்படுத்தலாம். இயந்திர பால் கறவையில் சுத்தம் மிக முக்கியம். பழைய பாலின் மிச்சம், குழாய்களில், கேனில் தங்கியிருந்தால் புதிய பாலுடன் அவை கலந்து மொத்த பாலும் கெட்டுவிடும். ஆகவே கவனம் தேவை.

மிக மிக பெரிய பண்ணையாளர்களுக்கு ஆட்டோமேட்டிக் மில்கிங் பார்லர், ரோபா கறவை போன்ற வசதிகளெல்லாம் உள்ளன.

சின்னச் சின்ன இயந்திரங்களின் உதவியின்றி இனி எதிர்கால வாழ்க்கையே இயங்காது என்பது எதார்த்தம். இதனை புரிந்துகொண்டு புதிய தொழில்நுட்பத்தையும், கண்டுபிடிப்புகளையும் அங்கீகரித்து அதனை நமக்காக்கிக்கொள்ள வேண்டும். கணினியுகத்தில் கட்டைவண்டியில்தான் செல்வேன் எனச் சொல்வது அறிவீனம். ஊரோடு ஒத்து ஒழுகு என்பது முதுமொழி. நாமும் காலமாற்றத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு வாழப் பழக வேண்டும்.

ஆதாரம் : கால்நடை பராமரிப்புத் துறை. குறிப்பு : பால் கறவை இயந்திரம் விற்பனையாளர்கள் விபரம், ஊர், தொலைபேசி எண் அல்லது கைபேசி எண் கமெண்டில் பதிவிட்டால் மற்ற நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment