Tuesday 6 March 2018

கால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை :

1. தீவன சோளம் சாகுபடி முறை
2. தானியத் தீவனப் பயிர்கள்

தீவன சோளம் சாகுபடி முறை :

இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும்.

தற்போது கால்நடைகளுக்கு 70 முதல் 75 சதவிகிதம் வரை பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சி, பால், இறைச்சி உற்பத்தி, இனப் பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பசுந்தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

கால்நடைகள் பசுந்தீவனங்களை விரும்பி உண்பதால் அவை உட்கொள்ளும் அளவு அதிகரித்து நல்ல உடல் வளர்ச்சி பெறுகிறது. பசுந்தீவனங்களில் அதிக அளவிலுள்ள புரதம், தாது உப்புகள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால், இறைச்சி உற்பத்திக்கும், இனப் பெருக்கத் திறனுக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் செரிமானத் திறனை அதிகப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் கால்நடைகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன.

பசுந்தீவனங்களைக் கொடுப்பதால் அதிக அளவு அடர் மற்றும் உலர் தீவனங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். இதனால் தீவனச் செலவை மிகவும் குறைக்க முடியும்.

பசுந்தீவனங்கள் அனைத்து பருவ காலங்களுக்கு ஏற்றதாகவும், வறட்சியைத் தாங்கக் கூடியதாகவும், விஷத் தன்மை அற்றதாகவும், தரமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அத்துடன், பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் உடையதாகவும், விதை மற்றும் விதைப் பொருள்கள் மலிவானதாகவும், நல்ல வாசனையுடனும் இருப்பது அவசியம்.

தானியத் தீவனப் பயிர்கள் :

தானியத் தீவனப் பயிர்கள் கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தனியாக தீவனத்துக்காக மட்டும் பயிரிடப்படுவதில்லை. தானிய உற்பத்திக்காக பயிரிடப்பட்டு அவற்றை அறுவடை செய்த பின்பு பெறப்படும் பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியன தீவனமாக உபயோகப்படுத்தப்படுகிறது. பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியவை முக்கியமாக உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பசுந்தீவனங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றில் சத்துக்கள் குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே தானிய வகைப் பயிர்களில் பிரத்யேகமானது தீவன மக்காச்சோளம் சூப்பிரிக்கஸ் மக்காச்சோளம். இவற்றை பயிர்களில் தானியங்களாக தனியாக அறுவடை செய்யாமல் பயிர் முழுவதும் 50 சதவீதம் பூக்கும் தருவாயில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

தீவனச் சோளம் ( கோ.எப்.எஸ்-29): தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) என்ற ரகம் உயரமாக வளரும் மற்றும் அதிக தீவன மகசூல் கொடுக்க வல்லது. இறவைப் பயிராகவோ அல்லது மானாவாரியாகவோ இவற்றை பயிரிடலாம் விதைத்து 60 நாள்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 30 கிலோ வரை விதை தேவை. ஹெக்டருக்கு 10 டன் தொழு உரம், 60 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும். விதைகளை வரிசைக்கு வரிசை 30-40 செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு பார்களில் விதைக்கலாம்.

விதைத்தவுடன் முதல் நீர் பாசனமும், பின்னர் 3ஆம் நாள் மறுபாசனமும் பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 60 நாள்களிலிருந்து தொடர்ந்து பூக்கும் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 5 முறை அறுவடை செய்யலாம். இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. சைலேஜ் முறையில் பதப்படுத்துவதற்கு பசுந்தீவன சோளப்பயிரை, சிறுசிறு துண்டுகளாக வெட்டி பக்குவப்படுத்தப்பட்ட முறையில் சேமித்து வைக்கலாம். மேற்கூறிய தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) பசுந்தீவனப் பயிர்களின் விதைகள் தேனி உழவர் பயிற்சி மையத்தில் கிடைக்கிறது.

கால்நடை வளர்ப்போர் இப்பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்து அவர்களுடைய கால்நடைகளுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் விற்பனை செய்து நல்ல பலன் பெறலாம்

ஆதாரம் : உழவர் பயிற்சி மையம், தேனி மாவட்டம், தமிழ்நாடு. Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment