Wednesday 21 March 2018

மாடுகளில் நோய் மேலாண்மை பகுதி - 2

1. உண்ணிகள்
2. பேன்கள்
3. தெள்ளுப்பூச்சி
4. உட்புற ஒட்டுண்ணி நோய்கள் :

* ஜோனீஸ் கழிச்சல் நோய்
* லெப்டோநோய்
* கழல் நோய்
* தொடை வீக்க நோய் (Lumpy Jaw)
* வெளிர் சிவப்புக் கண்
* படர் தாமரை
* டிரிகோமோனியாசிஸ்
* விப்ரியோ கருச்சிதைவு நோய்
* மருக்கள்
* மரநாக்கு நோய்
* மாட்டம்மை
* காசநோய்

உண்ணிகள் :

இவை இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சும் எனவே மாடுகள் ஓய்வின்றி இருக்கும். உண்ணியைக் கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம். அதிக அளவு உண்ணிகள் பெருகிவிடின் தடுப்பு முறைகள் பலன் தராது. இது அதிகமாக மேய்ச்சல் பகுதிகளில் காணப்படும். மாட்டின் மேல் மற்றும் தொழுவத்தில் உள்ள உண்ணிகளை இராசயன மருந்துகள் தெளித்துச் சரி செய்யலாம் அல்லது கால்நடைகளை மருந்தில் நனைத்தும், காது அடையாளக்குறிகளை சுத்தம் செய்தும் தூசிகளைச் சுத்தம் செய்தும் பரவலைத் தவிர்க்கலாம்.

பேன்கள் :

தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுகிறது. காதுகளைச் சுற்றி அதிகமாகக் காணப்படும். இதனால் மாடுகள் பசியின்றி எடைக் குறைந்து வளர்ச்சியற்று இருக்கும். இது குளிர் காலங்களில் வழக்கத்தை விட அதிகமாகப் பெருகும். எனவே குளிர் காலம் தொடங்குமுன் பேன் பரவலைத் தடுக்க, மருந்து நடவடிக்கைகளைச் செய்யவேண்டும். 3 வாரங்கள் தொடர்ந்து மருந்து அளிக்கப்படவில்லையெனில் சில முட்டைகள் சாகாது. தெளிப்பு முறை (அ) விலங்குகளின் முதுகில் ஊற்றுவதன் மூலம் மருந்து கொடுக்கலாம்.

தெள்ளுப்பூச்சி :

இது தோல் நோயைத் தோற்றுவிக்கிறது. இதன் தொடர்ச்சி தோல் முழுவதும் பரவுகிறது. இத்தொழு நோய் சார்கோப்டிக், பூச்சிகளால் ஏற்படுகிறது. கோரியோப்டஸ், டெமோடெக்ஸ் மற்றும் சாரா கேட்ஸப் பூச்சிகள் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. இது தொடர்பு மூலம் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இப்பூச்சி அதிக அளவு பெருகினால் கால்நடை நலிவடைந்து விடும். இவை குழியில் மறைந்து கொள்ளுவதால், கட்டுப்படுத்துவது கடினம். எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை உபயோகித்து நீக்கலாம். பேன் கட்டுப்பாட்டு முறை போல இதிலும் 2 (அ) 3 முறை பயன்படுத்தவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

உட்புற ஒட்டுண்ணி நோய்கள் :

ஜோனீஸ் கழிச்சல் நோய் :

* இது ‘யோநீஸ் நோய்’ என்றும் ‘பாராடியூபர்குளோசிஸ் நோய்’ எனவும் அழைக்கப்படுகிறது. இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளாசிஸ் என்னும் பாக்டீரியவினால் வயதான மாடுகள், ஆடுகள், மான், காட்டெருமை மற்றும் சிலவிலங்குகளில் தோற்றுவிக்கப்படுகிறது.

* இந்த ஜோனீஸ் நோயானது இளம் கன்றுகளிலேயே தோன்றிவிட்டாலும் அதன் உணவு செரிமானக் குழலில் தங்கிவிடுகிறது. இதன் அறிகுறிகள் 2-5 வயது ஆன மாடுகளிடமே வெளிப்படும். அதிக எடையிழப்பு, வயிற்றுப்போக்கு, பால் அளவு குறைவு போன்றவை இதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட கால்நடை நிறைய தீவனம் எடுக்கும். நல்ல தோற்றத்துடன் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இந்நோய் தாக்கினால் பின்பு குணப்படுத்த இயலாது.

* இதை ஆரம்பத்திலேயே கண்டுணர முடியாததால் சிகிச்சையளிக்க முடியாது. நல்ல கால்நடை மருத்துவர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையிலிருந்து அகற்றி பிற மாடுகளுக்குப் பரவாமல் தடுக்கலாம். இது பொதுவாக அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.

லெப்டோநோய் :

* இந்நோய் லெப்டோஸ்பைரா பொமோனா என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. சினை மாடுகளில் இந்நோயால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுகிறது. மஞ்சள் நிறத் திரவமும், இரத்தம் கலந்த சிறுநீரும் இதன் அறிகுறிகள் ஆனால் இது அவ்வப்போது மட்டுமே வெளிப்படும். இந்நோய் பாதித்த மாட்டின் பால் கெட்டியாகவும், இரத்தத் துளி கலந்தது போல் இருக்கும். பாதிக்கப்பட்ட 2 வாரங்களில் 7 மாத வயதில் கருச்சிதைவு ஏற்படுகிறது. இரத்தப் பரிசோதனை மூலம் இந்நோய் இருப்பதை அறியலாம்.

* சினைப் பருவத்திற்கு 30-60 நாட்கள் முன்பு தடுப்பூசி போடுதல் வேண்டும். விப்ரியோசிஸ் தடுப்பூசிகள் இந்நோய்க்கு சிறந்த தடுப்பான்.

கழல் நோய் :

* இந்நோய் கண்ட மாடுகளில் காய்ச்சல் அதிகமாக இருக்கும். கருச்சிதைவு 7-9 மாதத்தில் நிகழும். நஞ்சுக் கொடி எளிதில் விழாது. இது லிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ் என்னும் பாக்டீரியத்தினால் ஏற்படுகிறது. இந்த உயிரி மண், சாணம், புல் போன்ற எல்லா இடங்களிலும் இருக்கும். இந்த உயிரி மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. கால்நடை மட்டுமின்றி ஆடுகள், பன்றி, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிலும் ஏற்படுகிறது. அமைதியின்மை பசியின்மை, மிகுந்த காய்ச்சல் போன்றவை சுற்றிச்சுற்றி வருவதால் இது ‘சுற்று நோய் எனப்படுகிறது. அறிகுறிகள் தெரிந்த 2-3 நாட்களுக்குப்பின் பாதிக்கப்பட்ட விலங்கு இறந்து விடும். கால்நடையாயின் 2 வாரங்கள் வரை உயிர் வாழும்.

* கொட்டகைகளில் மாடுகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட தீவனம் அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். நல்ல எதிர்ப்புச் சக்தி உள்ள ஆரோக்கியமான மாடுகள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துக் குணப்படுத்தவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

தொடை வீக்க நோய் (Lumpy Jaw) :

* இந்நோய் ஏக்டினோமைசில் போவிஸ் என்ற உயிரியால் பரவுகிறது. இது பெரிய நகர்த்த முடியாத அளவு கட்டியை மாடுகளின் தொடையில் உருவாக்குகிறது. செம்புல் போன்ற புற்கள் உண்ணும் போது, அவை மாடுகளின் வாய் ஓரங்களில் சிறிது கிழித்துவிடுகிறது. இந்த இடுக்கு வழியே இவ்வுயிரி புகுந்து விடுகிறது. இந்தக் கட்டி பெரிதாகி தெரியுமளவு வர சில மாதங்களாகும். இதற்குள் இது சற்று முதிர்ந்து விடும். இந்தக் கட்டியில் மஞ்சள் நிற சீழ் போன்ற திரவம் எலும்பு இடுக்குகளில் தேங்கும். கவனிக்காவிடில் கட்டி பெரிதாகி உடைந்து அதிலிருந்து மஞ்சள் நிற சீழ் வெளிவர ஆரம்பித்துவிடும்.

* நாசி எலும்புகளை பாதிப்பதால் மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும். மெல்வதற்குக் கடினமாக இருப்பதால் மாடு உணவு உட்கொள்ளாது.

* இதற்குப் பயன்படுத்தப்படுவது அயோடின் முறை/ டெட்ராசைக்ளின். கட்டி ஏற்பட்டால் உடனே கால்நடை நல்ல நிலையிலிருந்தாலும் உடனே மந்தையிலிருந்து அகற்றி, தனியே வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லையெனில், கட்டி உடலின் பிற பாகங்களுக்குப் பரவ ஆரம்பித்து விடும்.

வெளிர் சிவப்புக் கண் :

* பெயருக்கேற்றார் போல் இந்நோய் பாதித்த மாடுகளின் கண்கள் வெளிர் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இது உயிர்க்கொல்லி நோய் இல்லாவிடிலும் பாதிப்பு பொருளாதார ரீதியில் அதிகம்.

* கண் விழியின் கார்னியா திரை மூடப்படுவதாலும், நிறைய நீர் கண்களிலிருந்து வடிவதாலும் கண்ணைத் திறக்க முடியாமல் மூடிக்கொள்ளும். ஒரு கண்ணோ \ இரண்டுமோ பாதிக்கப்படலாம். கார்னியாவின் நடுவே வட்டவடிவமான அரிக்கப்ப்டட் பகுதி உருவாவதால் எரிச்சல் இருக்கும். கண் மூடிக்கொள்வதால் சரியான தீவனமன்றி எடை குறையும். 4-8 வாரங்கள் அல்லது அதற்கு மேலும் இந்நிலை நீடிக்கும் சரியான சிகிச்சையளித்துக் குணமடைய ஆரம்பித்தால் இதில் உருவான வெளிறிய பகுதி மறைந்து விடும். பாதிப்பு அதிகமானால் இவ்வெளிர்நிறம் சரியாகக் குணமடையாமல் அடிக்கடி பார்வையைத் தொந்தரவு செய்யும். மேலும் பாதிப்பு அதிகரித்து நோய் எல்லா கார்னியாவின் எல்லா அடுக்குகளையும் பாதித்தால் கருவிழிறைச் சுற்றியுள்ள திரவம் வற்றிவிடும். இது நிரந்தர பார்வை இழப்புக்குக் காரணமாகும்.

* இந்நோய் பல வகைகளில் பரவுவதால் நல்ல தடுப்பு முறை அவசியம். ஈக்கள் மற்றும் கொசுக்களைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். காதைச் சூழ்ந்த உறைகள் பிளாஸ்டிக் உறை போன்றவை அணிவிக்கலாம். பொடித்தூவுதல், மருந்து தெளித்தல் மூலமாகவும் இவைகளைக் கட்டுப்படுத்தலாம்.

* மேய்ச்சலின் போது உயர வளர்ந்த புற்கள், விதைகள் மாடுகளின் கண்களில் பட்டு எரிச்சல் அடையச் செய்யும். எனவே புற்களை அவ்வப்போது வெட்டிவிடவேண்டும்.

* சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் கால்நடைக்கன்றுகளை பாதிக்கலாம். எனவே எப்போதும் நிழலில் வளர்ப்பதே சிறந்தது.
சரியான மருந்து கிருமி நாசினியை அவ்வப்போது அளித்தல் நல்ல பலனைக் கொடுக்கும்.

படர் தாமரை :

* தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய், டிரைக்கோஃபைட்டான் வெருகோசம் என்னும் ஸ்போர் உண்டாக்கும் பூஞ்சைகளால் தோற்றுவிக்கப்படுகிறது. இது மனிதர்களையும் தாக்குகிறது. அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. இப்பூஞ்சையின் ஸ்போர்கள் முளைத்து கால்நடையின் தோல், முடி போன்றவற்றை பாதிக்கிறது. பாதித்த பகுதியிலிருந்து சாறு போன்ற திரவம் வெளிவந்து தோல் பகுதியோடு சேர்ந்து புண்ணை உண்டாக்குகிறது. தோலைச்சுற்றிலும் வெளிச்சாம்பல் நிறம் தோன்றும். தலை மற்றும் கழுத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இது முடியற்ற ஒரு வட்டவடிவ வெண்சாம்பல் நிறத்தில் பல அறிகுறியை உடல் முழுதும் ஏற்படுத்துகிறது.

* இந்த படர் தாமரை நோய் தானாகவே சரிசெய்யக்கூடியது, அல்லது 2 சதவிகிதம் தைபெண்டலோஸ் பசைக்கரைசலை, உபயோகித்துக் குணப்படுத்தலாம்.

டிரிகோமோனியாசிஸ் :

* டிரிக்கோமோனாஸ் ஃபீட்டஸ் என்னும் புரோட்டோசோவாவினால் தோற்றுவிக்கப்படும் இந்நோய், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது மாடு மற்றும் காளையின் இனப்பெருக்க உறுப்பில் மட்டுமே காணப்படுகிறது. இந்த உயிரியானது காளையிடமிருந்து பசுவின் யோனிக்குழாயை அடைந்து பின்பு கருப்பைக்கு இடம் பெயர்கிறது. பாதிப்பு ஆரம்பித்தவுடன் ஒரு வெள்ளை நிறத் திரவம் பசுவின் இனப்பெருக்கப் (கன்று ஈனும்) பகுதியிலிருந்து வடிகிறது. 90 சதவிகிதம் மாடுகளுக்கு எளிதில் பரவக்கூடியது. கலப்பு பயனின்றிப் போவதால், சினையாக முடியாத தன்மை ஏற்படும்.

* இதற்கென எந்த தடுப்பூசியும் கிடையாது. ஆனால் செயற்றைக் கருத்தரிப்பின் மூலம் இது பரவுவதைத் தடுக்கலாம். காளைகளை கலப்பிற்கப் பயன்படுத்தும் முன்பு நன்கு பரிசோதிக்கவேண்டும். இது காளையினால் பரவுவதாகையால் ஒரு முறை பாதித்தால் அது கடைசி வரை காளைக்குள்ளேயே தங்கிவிடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

விப்ரியோ கருச்சிதைவு நோய் :

* கருவைக் கலைக்கும் மற்றொரு நோய் விப்ரியொசிஸ் ஆகும். இதுவும் காளையிடமிருந்து கலப்பின் போது பசுவிற்குப் பரவி அதை மலடாக்குகிறது. இதற்குத் தடுப்பு மருந்து உள்ள போதிலும், அதை யாரும் பயன்படுத்துவதில்லை. இந்நோயுள்ள காளையுடன் கலப்பு செய்யப்படும், தடுப்பூசி கொடுக்கப்படாத மாடுகள் மலட்டுத்தன்மை அடைகின்றன.

* இதில் பசுவின் யோனிக் குழாய், கருப்பை பாதிக்கப்படலாம். ஆனால் வெளியில் அறிகுறிகள் இருக்காது. பாதிக்கப்பட்ட பசு கருத்தரித்தாலும் 5-6 மாதங்களில் கருவானது சிதைந்து பிறந்து விடும். இதன் பின்பே பசு பாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடியும்.

* எனினும் 1 வருடத்தில் மீண்டும் பசு குணமாகிவிடும். 2 தடுப்பூசிகள் போடப்படவேண்டும். அதுவும் கலப்பிற்கு 4 வாரங்கள் முன்பு லெப்டோஸ்பைரோசிஸின் தடுப்பு மருந்துடன் கலந்து கொடுக்கலாம். செயற்கைக் கருத்தரிப்பு முறையும் இந்நோய்க்கு ஏற்ற மாற்று ஆகும். ஆனால் அதன் விந்துக்கள் விப்ரியோஸ் மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ், டிரைக்கோமோனியாஸிஸ் பரிசோதனைக்கு உட்பட்டிருக்கவேண்டும்.

மருக்கள் :

* பாப்பிலோமாவைரஸ் என்னும் வைரஸ் நோயை ஏற்படுத்துகின்றன. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. இது இளம் கன்றுகள் 1-2 வயதுள்ள கன்றுகளை பாதிக்கிறது. நோய் தோன்றி 1-6 மாதங்கள் கழித்து அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

* பொதுவாக இந்த மருக்கள் விலங்குகளுக்கு ஒரு அருவருப்பான தோற்றத்தைத் தரும். இது தானாகவே சுருங்கி சில மாதங்களில் விழுந்து விடும். அல்லது வீடுகளில் பழங்காலத்திலிருந்து செய்வது போல் ஏதேனும் எண்ணெய், பிரஷ் கொண்டு தேய்த்தாலும் போய்விடும். கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றை வைத்தும் நீக்கலாம்.

* இந்த மரு அதிக அளவு பரவிவிட்டால் இந்தக் காயங்களில் இருந்து எடுத்த மருந்தில் தடுப்பூசி அளிக்கலாம்.

மரநாக்கு நோய் :

இது உருண்டை வடிவ ஆக்டினோபேசில்லஸ் லிக்னீரிசி என்னும் பாக்டீரியாவினால் பரவுகிறது. இந்த பாக்டீரியாவானது நாக்கின் மடிப்பு மற்றும் காயங்கள் வழியே திசுக்களுக்குள் உட்புகுகிறது. ஏதேனும் கடினமான தண்டு அல்லது தீவனம் கொடுக்கும் போது அது நாக்கில் காயம் ஏற்படுத்தி இது போன்ற பாக்டீரியங்கள் நுழைய ஏதுவாகிறது. இது நாக்கின் மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. இதன் பாதிப்பு உடனடியாக நாக்கு தடித்தல் மூலம் வெளிப்படுகிறது. தடித்த நாக்கில் வலி இருக்கும். இது உள்ளே சற்று வளர்வதால் மாடுகளால் இயல்பாக அசை போட முடியாது. நாக்கில் புண்கள் தோன்றுவதால் எதுவும் உண்ணவோ, அருந்தவோ இயலாது. இது கவனித்தால் எளிதில் குணப்படுத்தக்கூடியதே.

சிகிச்சையின் அறிகுறி தெரிந்த உடனே ஆரம்பித்தால் நன்று. அயோடின் மற்றும் டெட்ராசைக்ளின் மருந்துகள் அளிக்க வேண்டும். நோய் முத்திவிட்டால் அறுவை சிகிச்சையும், தினசரி அயோடின் தடவ வேண்டியும் இருக்கும்.

மாட்டம்மை :

இந்நோய் கண்ட மாடுகளில் முதலில் லேசான காய்ச்சல் இருக்கும். பின்னர் மடியிலும், காம்புகளிலும் கொப்புளங்கள் ஆரம்பித்து. கடைசியில் சுருங்கி, கருகி, உதிர்ந்து விடுகின்றன. பால் கறக்கும் போது கொப்புளங்கள் இரணமாகி மாடுகளுக்கு வேதனையை அளிக்கும். இந்நோயோடு நுண்ணுயிர்க் கிருமிகளும் சேர்ந்து தாக்காமல் இருந்தால், மாட்டம்மை நோய் இரண்டு அல்லது மூன்று நாட்களில் குறைந்து விடும்.

தடுப்பு முறை :

பால் கறக்கும் தொழுவத்தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பால் கறக்கும் முன் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் மடியினைக் கழுவிய பின்னர் தினமும் பால் கறக்கவேண்டும் கொப்புளங்களுக்குக் கிருமி நாசினி மருந்து தடவி சிகிச்சை அளிக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

காசநோய் :

இந்நோய் மைக்கோபாக்டீரியம் ட்யூபெர்குலோசிஸ் என்னும் ஒரு வகை நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள் மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோய்க் கிருமிகள் நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. ஆகவே இந்நோயைக் குறித்து நாம் எச்சரிக்ககையாய் இருக்கவேண்டும்.

நோய் அறிகுறிகள் :

* பாதிக்கப்பட்ட மாடுகளில் விட்டு விட்டு லேசான காய்ச்சல் இருக்கும்.

* மாடு மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும்.

* இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும்.

* மார்பிலுள்ள நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும்.

* குடற்பகுதி பாதிக்கப்படுமானால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

* மடி பாதிக்கப்பட்டால் மடியில் கட்டிகள் ஏற்பட்டு, பாலின் தன்மை கெட்டுப்போகும்.

* பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.

தடுப்பும் பாதுகாப்பும் :

* தொடர்ந்து இளைத்துக்கொண்டே வரும் மாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தி காச நோய் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.

* நோயுற்ற மாடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தவேண்டும்.

* ஆறுமாதத்திற்கு ஒரு முறை மாடுகளை காசநோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.

* பாலை, கொதிக்க வைத்து அருந்தவேண்டும்.

* சுற்றுப்புறச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும்.

* மாடுகளுக்குத் தேவையான அளவு, தரமான தீவனம் அளிக்கவேண்டும். போதுமான அளவு பசுந்தீவனம் கொடுக்கவேண்டும். காற்றோட்ட வசதி, நல்ல தீவனம் இவை இரண்டும் இந்நோய்த் தடுப்பில் பெரிதும் உதவுகின்றன. கன்று பிறந்த 10 நாட்களுக்குள் பி.சி.ஜி தடுப்பூசி போடவேண்டும்.

* பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க்கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும். ஆதாரம்: தமழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠




No comments:

Post a Comment