Saturday 17 March 2018

செம்மறி ஆடு… செலவில்லாத பாடு…. உள்ளூரிலேயே உலக வருமானம்!

‘நீயெல்லாம் ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கு…’

– சரிவர படிக்காத மாணவர்களைப் பார்த்து, ஏக அதிருப்தியோடு ஆசிரியர்கள் உதிர்க்கும் வகுப்பறை வார்த்தைகள் இவை.

ஆனால், “இப்படிச் சொல்றது ரொம்ப ரொம்பத் தப்புங்க. ஏன்னா, ஆடு மேய்க்கிறது ஒரு லாயக்கான, லாபகரமானத் தொழில். சொல்லப்போனா படிச்சிட்டு பெரிய வேலைக்கு போய் சம்பாதிக்கறதைவிட கூடுதலா இங்க சம்பாதிக்கலாம்” என்று அடித்துச் சொல்கிறார் பழனிச்சாமி. பல வருடங்களாக செம்மறி ஆடுகளை வளர்த்து வரும் இவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதுதான் விசேஷமே!

ஈரோடு மாவட்டம், கோவில்பாளையம் கிராமத்தில் வசிக்கிறார் பழனிச்சாமி. ஒரு நாள் காலை வேளையில் அவரைச் சந்தித்தோம்.

“இந்த ஆடு, குட்டி போட்டு 2 மணி நேரம் ஆகியிருக்கு…” என்றபடியே இளம் குட்டி ஒன்றை கையில் அணைத்துக் கொண்டவர், “மத்த ஆடுங்க எல்லாம் மேய்ச்சலுக்கு போயிடுச்சி. சம்சாரம் ஓட்டிக்கிட்டு போயிருக்கா. வழக்கமா நான்தான் போவேன். இன்னிக்கு இந்த ஆடு ஈத்து எடுக்கிறதால நான் தங்கிட்டேன். பாருங்க, பால் கொடுக்கறதுக்காகச் சுத்தி சுத்தி வருது அம்மா. நாம அதுக்குத் தடையா இருக்கக் கூடாது. திண்ணைக்குப் போயிடுவோம்…” என்றபடியே குட்டியை இறக்கிவிட்டார்.

மேய்ச்சல் நிலம் கட்டாயம் தேவை!

திண்ணையில் வகையாக அமர்ந்து கொண்ட பழனிச்சாமி, ”சொந்தக் கிராமத்திலயே 35 வருஷமா வாத்தியார் வேலை பார்த்து, ஓய்வும் வாங்கியாச்சி. எங்க அப்பா காலத்துல இருந்து செம்மறி ஆடு வளர்த்துக்கிட்டிருக்கோம். படிக்கற காலத்துலயும், வாத்தியாரா வேலை பார்த்த காலத்திலயும், ஓய்வு கிடைச்சா… ஆடு மேய்க்கிறதுதான் எனக்கு முக்கிய வேலை. வேலையில இருந்து ஓய்வு வாங்கின பிறகு, இதையே முழுநேர தொழிலா மாத்திக்கிட்டேன். எங்கிட்ட, மொத்தம் 80 செம்மறி ஆடுங்க இருக்கு. 60 ஏக்கர்ல மேய்ச்சல் நிலம் கிடக்கு. கவலை இல்லாம ஆடு வளர்க்கற தொழிலை செய்துகிட்டிருக்கேன்.

செம்மறி ஆடுங்க இருந்தா, நம்ம கைவசம் கட்டாயம் மேய்ச்சல் நிலம் இருக்கணும். வெள்ளாடுங்க மாதிரி ரோட்டோரம், ஓடைக்கரை புறம்போக்குல மேய்க்க முடியாது. ஏன்னா வெள்ளாடுகள் மாதிரி தழை, காம்புகளை செம்மறி ஆடுங்க தின்னாது. நல்ல புல்லைத்தான் மேயும். அதுக்குத் தோதா தாராபுரம், குண்டடம் பகுதியில பல ஆயிரம் ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் கிடக்கு. மழை பெஞ்சா போதும்… அந்தக் காட்டுல கொழுக்கட்டைப் புல் ‘தளதள’னு வெளைஞ்சி நிக்கும். செம்மறிகளுக்கு ரொம்பவும் புடிச்ச தீனி, இந்தக் கொழுக்கட்டைப் புல். சும்மா தலைய கவிழ்த்திட்டு மேயும் பாருங்க… சாயங்காலம் வயிறு ‘கின்’னுனு நிறைஞ்சிடும். செம்மறி ஆடு வளர்ப்பு இந்தப் பகுதியில ஜெகஜ்ஜோதியா இருக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். சுமார் 60 ஆயிரம் செம்மறி ஆடுங்க இந்தப் பகுதியில இருக்கு. இந்த மண்ணும், இதுல விளையிற கொழுக்கட்டைப் புல்லும் நல்ல சத்து கொடுக்கறதால… எல்லா ஆடுகளும் ‘கொழு கொழு’னு ஆரோக்கியமா இருக்கும். நோய், நொடி பெரிசா தாக்காது.

உள்ளூர்லயே நல்ல வருமானம்!

என்னோட 35 வருஷ வாத்தியார் வாழ்க்கையில எந்தக் குழந்தையையும் ‘நீ ஆடு மேய்க்கத்தான் லாயக்கு’னு திட்டினதே கிடையாது. ஏன்னா… ஆடு மேய்க்கிறது தரக்குறைவான வேலை இல்லைனு நான் அழுத்தமா நம்பறதுதான். 50 ஆடுங்க வெச்சிருந்தாலே போதும் பெரிய வருமானம் கிடைச்சிடும். இந்தக் காலத்துல உலகத்தை எல்லாம் சுத்தி வந்து ஒருத்தர் சம்பாதிக்கறதுக்காக ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டியிருக்கு. அதுக்குப் பிறகு கிடைக்கற பணத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்தா… எந்த அலட்டலும் இல்லாம உள்ளூர்ல உக்கார்ந்து கிட்டே செம்மறி ஆடு வளர்ப்பு மூலமா கிடைக்கற வருமானம் அதிகம்தான். கோயம் புத்துர்ல கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை பார்க்கிற என்னோட மகன், லீவுக்கு ஊர் பக்கம் வந்தா… செம்மறி ஆடுகளை மேய்க்கறதுக்கு கிளம்பிடுவான். அவன் வர்றப்பெல்லாம், ஆடு மேய்க்கறதுல இருந்து எனக்கு லீவுதான்” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் பழனிச்சாமி.

திருப்பூர் தேவையில்ல… செம்மறியே போதும்!

அடுத்த ஊர் நோக்கிப் புறப்பட்டபோது… கண்ணில் பட்ட இடங்களில் எல்லாம் கூட்டம் கூட்டமாக செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டி ருந்தன. செங்காட்டூர் கிராமத்தின் சாலையோர மரம் ஒன்றின் அருகே நம்முடைய வாகனத்தை நிறுத்தியபோது… ‘ஆத்துக்கு அந்தப் பக்கம் ஆடு மேய்க்கும் சின்னத்தம்பி… ஆடு போனா, தேடிக்கலாம். ஆட்டத்துக்கு வந்து சேரு! குளத்துக்கும் அந்தப் பக்கம் குட்டி மேய்க்கும் சின்னத் தம்பி… குட்டி போனா, தேடிக்கலாம். கூட்டத்துக்கு வந்து சேரு!’ என்றொரு பாடல் காற்றில் கலந்தோடி வந்து நம்மை ஈர்த்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்… ராஜேஸ்வரன். திருமணமாகாத இந்த இளைஞர், தன்னுடைய செம்மறி ஆடுகள் மீது ஒரு கண் வைத்தபடியே நம்மிடம் கலகலப்பாக பேசத் தொடங்கினார்.

“30 செம்மறி ஆடுங்க இருக்கு. மேய்ச்சல் நிலம் 20 ஏக்கர் வெச்சிருக்கோம். என்னோட வயசு பசங்கள் சில பேரு ஆடுகளை வித்துப்போட்டு திருப்பூர் பக்கம் வேலைக்கு போயிட்டாங்க. என்னையும் கூப்பிட்டாங்க. ஆனா, எனக்கு துளிகூட அதுல இஷ்டமில்லீங்க. அதனால, ‘ஆடு மேய்க்கிற வேலையே போதும்’னு அவங்ககிட்ட சொல்லிட்டேன். ஆடு மேய்க் கிறதை கௌரவ குறைச்சலா நினைக்கறாங்க. ஆனா, என்னைப் பொருத்த வரை இது, ரொம்பவே கௌரவமானத் தொழில். ஈடுபாட் டோட இதைச் செய்துகிட்டிருக்கேன்.

கவர்மென்ட் வேலை மாதிரியேதான்!

வெள்ளாடு மேய்க்கிறது வேணும்னா கொஞ்ச கஷ்டமா இருக்கலாம். வேலியை மேயறதுக்கு ஒரு ஆடு.. வெள்ளைமைய திங்கறதுக்கு இன்னொரு ஆடுனு திசைக்கு ஒண்ணா ஓடித் திரியும். செம்மறி ஆடுங்க அப்படி இல்ல. காலையில பட்டியைத் திறந்து மேய்ச்சலுக்கு ஓட்டத் தேவை இல்லை. பனி ஈரத்துல புல்லை மேயாதுங்கறதால, நல்ல வெயில் ஏறின பிற்பாடு 10 மணிக்கு திறந்து விட்டா போதும். அதுக பாட்டுக்கு கும்பலா, காலாற மேய்ஞ்சிக்கிட்டு திரியும். மத்தியானம் பத்து குடம் தண்ணியைக் கொண்டு வந்து ஊத்தினா போதும். வயிறு முட்ட குடிச்சிட்டு, ‘அக்கடா’னு மரத்தடி நிழல்ல எல்லா ஆடுகளும் படுத்துடும். தூக்கு வாளி சாப்பாட்டை சாப்பிட்டுட்டு, ஊஞ்ச மர நிழல்ல புத்தகம் படிச்சிட்டு நாமளும் உட்கார்ந்துக்கலாம். சாயந்திரம் 5 மணிக்கு, திருப்பி ஓட்டிக்கிட்டுப் போய் பட்டியில அடைச்சிடலாம்.

கவர்மென்ட் வேலை மாதிரியே… காலையில 10 மணியில் இருந்து சாயந்திரம் 5 மணி வரைக்கும்தான் வேலை. அது முடிஞ்சா… அரசமரத்தடி பிள்ளையார் கோயில் மேடையில உட்கார்ந்து கிட்டு… உள்ளூர் கரன்ட் பிரச்னை தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்ல ஒபாமா ஜெயிச்சது வரைக்கும் சோட்டாளிங்களோட அரட்டைக் கச்சேரிதான். அடுத்த நாள் காலையில வழக்கம்போல மேய்ச்சலுக்குக் கிளம்பிடணும். இப்படியே நம்ம வாழ்க்கை ஜாலியா போயிக்கிட்டிருக்குதுங்கோ…” என்றவர், ‘உச்… உச்…’ என்று கட்டளைக் குரல் கொடுக்க.. ஆடுகள் அனைத்தும் கூட்டமாக இணைந்து வர, அவற்றை அப்படியே பட்டியில் ஓட்டி, மூங்கில் கதவை அடைத்துவிட்டு, பேச்சைத் தொடர்ந்தார் ராஜேஸ்வரன்.

வருஷத்துக்கு 45 குட்டி!

“பெரும்பாலும் நாட்டு ரகம்தான் இங்க வளர்க்கிறோம். மேச்சேரி ரகம் கொஞ்ச காலமா உள்ள வர ஆரம்பிச்சிருக்கு. பெரிய ஆடுன்னா… 2,500 முதல் 3,000 ரூபாய் வரை விலை இருக்கும். 90 நாள் குட்டியா இருந்தா… 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விலை போகும். 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடாங்கற விகிதத்துல இருக்கணும். கிடா விலை 4,000 ரூபாய் வரை இருக்கும்.

ஒரு ஆடு, ரெண்டு வருஷத்துல 3 குட்டி வரை போடும். சமயத்துல 4 குட்டியும் கிடைக்கும். 30 ஆடுங்க மூலமா 2 வருஷத்துல 90 குட்டிங்க கிடைக்கும். அதாவது, ஒரு வருஷத்துக்கு 45 குட்டி. 90 நாள் வயசுள்ள குட்டிகளை பக்கத்துல இருக்கற குண்டடம் ஆட்டுச் சந்தைக்கு வேன்ல ஏத்தி கொண்டு போய் வித்துடுவோம். சீசனுக்கு தகுந்தபடி விலை கிடைக்கும். ரம்ஜான், பக்ரீத் பண்டிகை சமயத்துல குட்டிங்க கிடைக்கற மாதிரி கணக்கு பண்ணி வளர்த்தா… கூடுதல் லாபம்தான். ஒரு குட்டி சராசரியா 8 கிலோ எடை இருக்கும். ஒரு பெட்டை ஆடு 5 வருஷம் வரைதான் பலன் கொடுக்கும். அதுக்கு மேலே வளர்த்தால் ஈத்து குறையும். தரமான குட்டியும் போடாது. அந்த நேரம் பார்த்து வித்துட்டு, வேற குட்டிகள எடுத்து வளர்க்கலாம்.

என்னைப் பொருத்த வரை, வருஷம் 45 குட்டிகளை விலைக்கு கொடுக்கிறேன். அதன் மூலம் 80 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறேன். பெரிசா எந்தச் செலவும் இல்லை. பஸ்ல ஏறி, படியில தொங்கி… டவுன்ல போய் வேலை பார்த்து ராத்திரி அப்படியே திரும்பி வந்து, வீடு சேர மணி 10 ஆயிடும். அலுப்புத்தட்டி அப்படியே படுக்கையில விழுந்தா… விடியகாலையில மறுபடியும் எழுந்து ஓடணும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு போயி டவுன்ல வாங்குற சம்பளத்தைவிட… உள்ளூர்லயே ஆடு மேய்க்கிறதுல கூடுதல் வருமானம்தான். அலைச்சல்பாடும் இல்லை” என்றார் நிம்மதி பெருமூச்சோடு!

“செம்மறிதான் எங்க பேங்க்!”செம்மறி ஆடுகளை மேய்த்து வருமானம் பார்ப்பவர்களில் ஒருவர், இதேபகுதியைச் சேர்ந்தவரான பிரகலாதசாமி கவுண்டர். அவரிடம், “தை, மாசி, பங்குனினு கோடையில மேய்ச்சல் நிலமெல்லாம் வறண்டு கிடக்குமே… அப்ப தீனிக்கு என்ன செய்வீங்க?” என்று கேட்டோம்.

“செம்மறி ஆடுகள் வைச்சிருக்கிறவங்க பல ஏக்கர்ல மேய்ச்சல் நிலமும் வெச்சிருப்பாங்க. அதுல சில ஏக்கர்ல மட்டும் ஆடுகளை விடாமல் பாதுகாத்து வருவாங்க. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை அடைமழை காலத்துல பருவமழை பெஞ்ச உடனே நரிப்பயறு, கொள்ளு இந்த இரண்டையும் கலந்து விதைச்சுடுவாங்க. இயற்கையா விளையற கொழுக்கட்டைப் புல்லோட போட்டிப் போட்டு நரிப்பயறும், கொள்ளும் வளர்ந்து கிடக்கும். சரியா, மாசி பங்குனி, சித்திரை மூணு மாசத்துக்கும் அப்படியே மேயவுட வேண்டியதுதான்.

சிலபேருங்க நரிபயறு, கொள்ளு… கொடிகளை புடுங்கி அறுவடை செஞ்சி பயறுகளை பிரிச்சி எடுத்துட்டு கொடிகளை போர் போட்டு வெச்சிடுவாங்க. தேவையானப்ப, தீனியா எடுத்துப் போடுவாங்க. இதையெல்லாம் தின்னுட்டு ஆடுங்க நல்லா வளர்ந்து நிக்கும். சந்தைக்குக் கொண்டு போனா போதும், வியாபாரிங்க போட்டி போட்டுக்கிட்டு விலை பேசுவாங்க.

வருஷத்துல ரெண்டு தரம் பக்கத்து ஊரு மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிப் போய் தடுப்பூசி போடுவோம். செம்மறி ஆடுகளை அதிகம் தாக்கும் நீலநாக்கு நோய், வாய்சப்பை மாதிரியான நோய்ங்க… வராம இதன் மூலம் தடுக்கலாம்” என்றார்.

அருகிலிருந்த அவருடைய மனைவி வள்ளியம்மாள், ‘‘எங்கள மாதிரி மானாவாரி மனுஷங்கள… பொழப்பு தேடி வெளியூர் போகாம இங்கேயே வாழ வெக்கிறது இந்த செம்மறி ஆடுங்கதான். குடும்பத்துல நடக்கிற படிப்பு, கல்யாணம், காதுகுத்து மாதிரியான பெரிய செலவுங்களுக்கு பணம் கொடுக்கிற பேங்க்கும் இந்த செம்மறி ஆடுங்கதான்” என்றார் பெருமையாக.

திகிலூட்டும் திருப்பூர்! ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தாராபுரம், குண்டடம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கில் மேய்ச்சல் நிலங்கள் இருக்கின்றன. இங்கெல்லாம் வளமான கொழுக்கட்டைப் புல் வளர்வதால்தான், ஆடு மற்றும் மாடு வளர்ப்பு இந்தப் பகுதிகளில் பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக காங்கேயம் ரக காளைகள் கொழுகொழுவென காணப்படுவதற்கு காரணமே இந்தக் கொழுக்கட்டைப் புல்தான். செம்மறி ஆடுகளை வளர்ப்பவர்களும் இதை நம்பித்தான் இங்கே தங்கள் தொழிலை தொடர்கிறார்கள். இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் திருப்பூர் மாவட்டத்துடன் தாராபுரம் மற்றும் குண்டடம் பகுதிகள் இணைக்கப்பட, இது கால்நடை வளர்ப்போரை கவலை கொள்ளச் செய்துள்ளது. “திருப்பூர் பனியன் தொழிற்சாலைங்க, சாயப்பட்டறைங்க எல்லாம் தங்களோட தொழிற்சாலைகளை விரிவு படுத்தறதுக்காக ஏக்கர் கணக்குல இருக்கற எங்களோட மேய்ச்சல் நிலங்கள் மேலதான் கண் வைப்பாங்க. அரசாங்கமும் அவங்களுக்கு ஆதரவா களமிறங்கும். அதனால கொஞ்ச நாள்லயே இந்த நிலமெல்லாம் காணாம போயிரும். அதுக்குப் பிறகு எங்க பாடு திண்டாட்டம்தான்” என்று எதிர்காலத்தை நினைத்து பதற்றத்துடன் பேசுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

நாளை நடப்பதை யாரறிவாரோ!

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment