Monday 5 March 2018

கறவை மாடு வளர்ப்பு :

1. கறவை மாடு
2. விவரங்கள்
3. முக்கிய பராமரிப்பு உத்திகள்
4. தீவனப் பராமரிப்பு
5. நோய்கள்
6. கேள்வி பதில்கள்

கறவை மாடு :

கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகள்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

விவரங்கள் :

சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.

முக்கிய பராமரிப்பு உத்திகள் :

* சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

* சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.

* கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.

* ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

தீவனப் பராமரிப்பு :

* சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.

* கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.

* இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.

* இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

* கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.

* மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.

* இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.

* பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.

நோய்கள் :

சினை மாடுகளில் கருச்சிதைவு நோய், கருப்பை அழற்ச்சி, கருப்பை வெளித்தள்ளுதல் போன்ற நோய்கள் குறித்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும், நல்ல பால் வளத்தையும் பெருக்க முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

கேள்வி பதில்கள் :

கேள்வி :

மாடு கன்று போட்டு ஒரு மாதம் ஆகிறது. கன்று போட்ட நாள் முதல் பால் கறக்கவிட மாட்டேன் என்கிறது, உதைக்கிறது, காலை கட்டினாலும் துள்ளுகிறது. ஆனால் மடிவீக்கம் எதுவுமில்லை. பால் கறப்பதற்கு என்ன செய்யலாம்?

பதில் :

மாட்டுக்கு இது முதல் கன்று என்பதால் கூச்சக்குணத்தால் இப்படி உதைக்கவும், பால் கறக்க விடாமல் செய்கிறது என்று நினைக்கிறேன். இது பிறவிக்குணமாகவோ இருக்கலாம். நாளாக நாளாக தான் இதை சரி செய்ய வேண்டும். இனிமேல் பால் கறக்கும் போது ஏதாவது ஒரு வகையில் மாட்டின் திசை திருப்பி விடும் வகையில் செய்து பால் கறக்க வேண்டும்.

கேள்வி :

மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?

பதில் :

டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete