Sunday 4 March 2018

சைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’ :

1. சைலேஜ் என்பது என்ன?
2. சைலேஜ் தயாரிப்பதில்தான் என்ன பிரச்னை?
3. ஊறுகாய் புல் என்றால் என்ன?
4. தொழில்நுட்ப முறை
5. தயாரிக்கும் முறைகள்

சைலேஜ் என்பது என்ன?

சைலேஜ் என்பது பதப்படுத்தி சேமிக்கப்படும் கால்நடைத் தீவனமாகும். இதனை ஊறுகாய்ப் புல் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர். நமது உணவு வகைகளில் ஊறுகாய் என்பது குறிப்பிட்ட பக்குவத்தில், பதத்தில் சேமித்து நீண்ட காலம் வைக்கப்படும் உப உணவு. புதிய ஊறுகாயைவிட, சேமித்து வைக்கப்படும் ஊறுகாய்க்கு சற்றே கூடுதல் சுவை என்பது அனைவரும் அறிந்ததே. ஜாடியை எப்போது திறந்தாலும் நாக்கின் சுவை முடிச்சுகளை உமிழ்நீரால் மிதக்கவைக்கும் ஊறுகாயைப் போலவே, ‘சைலேஜ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஊறுகாய்ப் புல்லும் கால்நடைகள் விரும்பி உண்ணும் சுவைமிகு தீவனமாகும்.

இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களிலும், மேலை நாடுகளிலும் கால்நடைகள் வளர்ப்போர் பயன்படுத்தும் அளவுக்கு நம் தமிழகக் கால்நடை வளர்ப்போர் சைலேஜ் எனப்படும் பதனப்படுத்தப்பட்ட பச்சைப் புல் அல்லது ஊறுகாய்ப் புல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை. இதற்கு என்ன காரணம் என்ற வினாக்குறி நீண்ட காலமாகவே உள்ளது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சைலேஜ் தயாரிப்பதில்தான் என்ன பிரச்னை?

எந்த முறையைப் பற்றிப் பார்த்தாலும், அதில் நுட்பமாக ஒரு வியாபாரத்தனம் ஒளிந்திருக்கிறது.

1. நமக்கு ஆண்டு முழுவதும் பசும்புல் ஒரே தரத்தில், ஒரே அளவில் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. பருவ மழை முடிவடைந்தவுடன், தேவைக்கு மேலே பசும்புல் கிடைக்கும். அது நிறைந்த ஊட்டச்சத்துகளுடன் இருக்கும். வறண்ட காலங்களில் மிகவும் குறைவாகவே பசும்புல் கிடைக்கும். அதுவும் ஊட்டச்சத்துகள் குறைந்ததாகவே இருக்கும்.

2. நாமே சாகுபடி செய்து பசும்புல், தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம் போன்றவற்றை உற்பத்தி செய்யும்போது, என்னதான் திட்டமிட்டு பல்வேறு வயது இடைவெளியில் வளர்த்தாலும், திடீரெனப் பெய்யும் மழை, அதன் அறுவடைக் காலத்தை மாற்றம் அடையச் செய்து, ஒரே சமயம் அறுவடை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கிவிடுகிறது. அப்போது கால்நடைகளுக்கு, தேவைக்கும் மேல் தீவனம் வளர்ந்து காத்து நிற்கும்.

3. வேளாண்மையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தீவனப் புல் வகையான கம்பு நேப்பியர் ஒட்டுவகை புல், பூப்பதற்கு முன்னரே அறுவடை செய்வதும், தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம் போன்றவற்றை கதில் பால் பிடிக்கும் தருணத்தில் அறுவடை செய்தால்தான் இவ்வகை தீவனங்களில் அதிகபட்ச பலன் கிடைக்கும் என்பது விஞ்ஞானிகளாலும், கால்நடை வளர்ப்பவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. காலம் தவறிய அறுவடையால் தரம் குறைந்த பசுந்தீவனத்தை மட்டுமே கால்நடைகளுக்குக் கொடுக்க முடியும்.

4. இதுபோன்ற சூழ்நிலைகளால் அல்லப்படும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, ஒரு எளிய மாற்றுதான் இந்த பதனப்படுத்தப்பட்ட பசும்புல் எனப்படும் சைலேஜ் எனப்படும் ஊறுகாய்ப் புல்.

ஊறுகாய் புல் என்றால் என்ன?

அது வினைத்தொகை. ஊறுகின்ற காய், ஊறிய காய், ஊறும் காய் என தமிழ் இலக்கணம் சொல்கிறது. ஒரு சுவையான உப உணவுப் பொருளை மாவடு, எலுமிச்சை, மா, நாரத்தை போன்றவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய், இன்ன பிற நறுமணப் பொருள்கள் சேர்ந்து சுவைகூட்டி, இந்த சுவையை நீண்டகாலம் சேமித்து வைக்கும் உணவு அறிவியல்தான் ஊறுகாய். இதைப்போன்ற முறையில் பசுந்தீவனத்தின் சுவையைக் கூட்டி, தரத்தை தக்கவைக்கும் தொழில்நுட்பம்தான் சைலேஜ்.

தொழில்நுட்ப முறை :

சைலேஜ் தயாரிப்பு என்பது ஒரு பெரிய தொழில்நுட்பம், ஆள் அம்பு சேனை பலத்துடன்கூடிய வேலை என்பதாகவே இருந்து வருகிறது. சைலேஜ் தயாரிக்க ஒரு பெரிய குழி வெட்ட வேண்டும் அல்லது தரைக்கு மேலை பெரிய தொட்டி கட்ட வேண்டும். அதை தண்ணீர் புக முடியாத அமைப்பாக மாற்ற வேண்டும். தொட்டி கட்டுவதென்றால், கட்டுமானச் செலவு நம்மை முதலில் பயமுறுத்தும். அடுத்தது யூரியா… இயற்கை வேளாண்மை செய்பவர்கள் மண்ணுக்கே யூரியா கூடாது என்று சொல்லும்போது, மாட்டுக்கு யூரியா என்றால் கலகத்துக்கே வந்துவிடுவார்கள். நுண்ணூட்ட உப்பு, சில்ஆல் எனும் பாக்டீரியல் கல்ச்சர், மொலாசஸ் எனும் கரும்பு ஆலைக் கழிவு அல்லது கசிவு கருப்பட்டி, மூடி வைக்க பெரிய பிளாஸ்டிக் பாய், ப்ளோயர் டைப் சாஃப் கட்டர் என ஒரு முழு நீளப் பட்டியலே தயாராகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

தயாரிக்கும் முறைகள் :

1. பால் பிடிக்கும் தருணத்தில் உள்ள தீவன மக்காச்சோளப் பயிர், தீவனச் சோளப் பயிர். இவற்றின் தண்டுப் பகுதியை நாம் கடித்துச் சுவைத்தால், நாவில் இனிப்புச் சுவை தட்ட வேண்டும். சுக்ரோஸ் எனும் இனிப்புச் சத்து தட்டையில் இருந்தால் இனிப்பாக இருக்கும். இந்தப் பயிரை தீவனம் நறுக்கும் சாப் கட்டர் (Chaff cutter) கருவி மூலம் இரண்டு அங்குலத்துக்கு மிகாத துண்டுகளாக நறுக்க வேண்டும். இவ்வாறு வெட்டிய துண்டுகளை நமது உள்ளங்கையில் வைத்து இறுக்கி அழுத்தும்போது கைகளில் ஈரப்பதம் உணரப்பட வேண்டும். ஆனால், தண்ணீர் சொட்டக்கூடாது. இதுதான் சைலேஜ் தயார் செய்ய சரியான பக்குவம். வெட்டிய துண்டுகளில் ஈரம் அதிகம் தெரிந்தால், வெய்யிலில் லேசாக வாட விடுங்கள். குறைவாக இருந்தால், லேசாகத் தண்ணீர் தெளியுங்கள்.

2. இரண்டு அடி அகலம், மூன்று அடி உயரம் உள்ள காற்று புக முடியாத பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொள்ளுங்கள். பை கெட்டியாக இருக்க வேண்டும். ஒரு பை 100 கிராமுக்கும் குறைவில்லாமல் எடை இருக்க வேண்டும். இந்தப் பைக்குள், வெட்டிய பசுந்தீவனத்தைக் கொட்டி மிகவும் நன்றாக அழுத்தி, அதிகப்படியான இறுக்கத்துடன் நிரப்ப வேண்டும். கனமான ஆள்கள் ஏறி கால்களால் மிதித்து இறுக்குவது அல்லது திம்சுக்கட்டையால் இறுக்குவது போன்ற முறைகளை கடைப்பிடிக்கலாம். நன்கு இறுக்கி, உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றி, வாய்ப் பகுதியை கூட்டிப் பிடித்து, பைகளில் மேல்புறம் உள்ள காற்றையும் அழுத்தம் கொடுத்து வெளியேற்றி சணல் கயிற்றால் மிக இறுக்கமாகக் கட்ட வேண்டும். கட்டுக்கு மேல் 3 அங்குல பேக்கிங் டேப்பால், வெளிக்காற்று உள்ளே புகாதபடி ஒட்டிவிட வேண்டும். எந்த நிலையிலும் பைக்குள் காற்று இருக்கக்கூடாது. கவனம் தேவை.

3. இந்த பேக்கிங் சுமார் 20 – 25 கிலோ எடை இருக்கும். இதனை அப்படியே வைக்கலாம். வாய்ப்பு இருப்போர், பயன்படுத்திய சுத்தம் செய்த உர, மாட்டுத் தீவனப் பைகளிலும் கட்டிவைக்கலாம்.

4. மூன்று வாரம். 21 நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். ‘அனிரோபிக்’ கண்டிஷனையும் தாண்டி அருமையான மணம் வீசும். அது ஆல்கஹால் மணம். வெட்டிய தீவனத்தில் உள்ள சுக்ரோஸ், நுண் உயிர்களால் சிதைக்கப்பட்டு நொதித்தல் முறையில் ஆல்கஹாலாக உருவாகிறது. ஆல்கஹால் ஒரு சிறந்த பிரிசர்வேட்டிவ். அதனால், உள்ளே இருக்கும் பொருள்கள் கெட்டுவிடாமல் இருக்கும்.

5. இந்த சைலேஜ் மூட்டைகளை எலி, அணில் போன்றவை கடித்துவிடாமல் பத்திரப்படுத்த வேண்டும். இதன் மணமும் சுவையும் எலி, அணில் போன்றவற்றை கவர்ந்து இழுக்கும். சாக்குப்பைகளை இவை ஓட்டையிட்டுவிடாமல், அதன் வழியே காற்று உள்ளே புகுந்து சைலேஜ் முழுவதும் கெட்டுவிட நேரிடும். சைலேஜ் மூட்டைகளை நிழலான பகுதியில் மழை, வெய்யில் இரண்டில் இருந்தும் பாதுகாப்பு செய்து சேகரித்து வைக்க வேண்டும். சைலேஜ் செய்வதற்கென தனியே பெரிய பைகளை சில நிறுவனங்கள் தயார் செய்து விற்கின்றன. இவற்றின் கொள்ளளவும், எடையும் அதிகம். ஆகவே, கையாள்வது சிரமம். ஒரே முறையில் உபயோகிக்கவு இயலாது. சிறிய பைகளில் சைலேஜ் தயாரிக்கும்போது, மூட்டைகளைத் தூக்குவது, அடுக்குவது, பசு, ஆடு போன்ற கால்நடைகளுக்கு அளவறிந்து கொடுப்பது போன்ற வேலை எளிதாக இருக்கும்.

6. நமது தினசரி சைலேஜ் தேவை எத்தனை கிலோ, மாதாந்திர தேவை எத்தனை கிலோ என எளிதாகக் கணக்கிடலாம். அதற்கு ஏற்க, முன்கூட்டியே திட்டமிட்டு பேட்ச், பேட்ச் ஆக தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். வருடம் முழுவதும் ஒரே மாதிரியான சுவையும் சத்தும் உள்ள தீவனத்தை நம்முடைய ஆடு மாடுகளுக்குக் கொடுக்கலாம். நூறு சதவீதம் வெளி இடுபொருள் எதுவும் இல்லாத இயற்கை முறை தயாரிப்பு என்பதால், இயற்கை ஆர்வலர்கள் இதை எதிர்த்து கொடி பிடிக்க இயலாது.

7. தீவனம் மட்டும் உற்பத்தி செய்து, அதை தரமான சைலேஜாக மாற்றி மற்ற பண்ணைகளுக்கும் விற்பனை செய்யும் தொழில் வாய்ப்பு இதில் உள்ளது. தயாரிப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எவ்வித உற்பத்தி ரகசியமும் இதில் இல்லை. எவருக்கு விற்பனை செய்வது என்பதையும் மிக எளிதில் கண்டறியலாம். கிராமப்புற இளைய தொழில்முனைவோருக்கு நல்லதொரு புதிய தொழில் வாய்ப்பு.

8. பன்னெடுங்காலமாக உள்ள தொழில்நுட்பம் என்றாலும், இப்போது எளிமையாகச் செய்வதற்கு ஏற்ற வடிவில் உள்ளதால், அபரிமிதமாக பசுந்தீவனம் கிடைக்கும்போது தயார் செய்து, தீவனப் பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்த அருமையான தொழில்நுட்பம் இந்த சைலேஜ்.

ஊறுகாய் புல் தயாரிப்பு பற்றிய காணொலி : https://www.youtube.com/watch?v=NUfM1sw5xS0&t=35s

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete