Monday 19 March 2018

கருங்கோழிகள்... - குஞ்சுகளாக விற்பனை செய்தால் கூடுதல் லாபம்!

விவசாயம் பொய்த்துப்போகும் சூழ்நிலையில் விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாகக் கைகொடுக்கும் உபதொழில் கால்நடை வளர்ப்புதான். இறைச்சிக்காகப் பயன்படும் ஆடு, கோழி, வான்கோழி, பன்றி போன்றவற்றுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருப்பதால், இவற்றை வளர்ப்பவர்களுக்கும் விற்பனைக்குப் பிரச்னையே இருப்பதில்லை. சரியான பராமரிப்புமுறைகளை மேற்கொண்டு இறைச்சிக்கான கால்நடைகளை வளர்த்து, நல்ல லாபம் எடுத்துவரும் விவசாயிகள் ஏராளமானோர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன்.

கருங்கோழிகள் மற்றும் நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஈடுபட்டு வெற்றிகரமாக லாபம் பார்த்து வருகிறார் சரவணன். ஒரு பகல் பொழுதில் கோழிகளுக்குத் தீவனம் கொடுத்துக்கொண்டிருந்த சரவணனைச் சந்தித்தோம்.

“நான் விவசாயக் குடும்பத்துல பிறந்தவன்தான். காலேஜ் முடிச்சுட்டுச் சென்னையில் தனியார் நிறுவனங்கள்ல வேலைசெஞ்சுட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல பொழுதுபோக்கா கருங்கோழிகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.

மத்தியப்பிரதேசம், ஆந்திரானு போய்க் கலப்பு இல்லாத, ‘ஒரிஜினல்’ கருங்கோழிகளை வாங்கிக்கிட்டு வந்து வளர்த்துட்டுருந்தேன். அந்தச் சமயத்துல ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சதுல விவசாயத்துமேல ஆசை வந்துடுச்சு. அதனால, நாலு வருஷத்துக்கு முன்னாடி, சென்னையிலிருந்த வேலையை விட்டுட்டுச் சொந்த ஊருக்கே (வெள்ளூர்) வந்துட்டேன். எங்களுக்கு 30 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 12 ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. மீதி 18 ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்றோம். தென்னைக்கு முழுக்க இயற்கைமுறையிலதான் பராமரிப்பு பண்றோம். இன்னும் நெல் சாகுபடியை முழுசா இயற்கைக்கு மாத்தல. கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிட்டுருக்கோம். இதோடு நாட்டுக்கோழிகளையும், கருங்கோழிகளையும் வளர்த்துட்டுருக்கோம்” என்ற சரவணன், தான் மேற்கொண்டு வரும் கோழி வளர்ப்பு குறித்துச் சொன்னார்.

“நாங்க இயற்கைமுறையிலதான் கோழிகளை வளர்த்துக்கிட்டு இருக்கோம். அசோலா, வேப்பிலை, முருங்கை இலை, அகத்திக்கீரைனு கீரைகளை உணவாகக் கொடுக்குறோம். அதோடு, பகல் நேரத்துல தோட்டத்துக்குள்ளயே மேய்ச்சலுக்கு விடுறதுனால, நாட்டுக்கோழிகளை அதுகளுக்கான குணாதிசயத்தோடு ஆரோக்கியமா வளருது. அதேபோல அடர்தீவனத்துக்காகக் கம்பெனித்தீவனம் கொடுக்குறதில்லை. நாங்களே அரைச்சுதான் கொடுக்குறோம். தோட்டத்துக்குள்ள கறையானையும் உற்பத்தி பண்ணிவிடுறோம். பெரும்பாலான நோய்களுக்குப் பாரம்பர்ய வைத்தியம் செஞ்சுக்குவோம். நோய்த்தடுப்புக்கான ஊசிகள், சொட்டு மருந்துக்கு ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்துறோம்.

நாட்டுக்கோழிகள்ல 180 பெட்டை, 20 சேவல்கள்னு தாய்க்கோழிகள் இருக்கு. கருங்கோழிகள்ல 31 பெட்டை, 5 சேவல்னு தாய்க்கோழிகள் இருக்கு. இந்தத் தாய்க்கோழிகள்ல இருந்து குஞ்சுகளை உற்பத்திசெஞ்சு விற்பனை செய்றோம். குஞ்சுகள் விற்பனையைத்தான் பிரதானமா வெச்சுருக்கோம். அப்பப்போ வயசான சேவல், பெட்டைகளைக் கழிச்சுக்குவோம். எங்ககிட்ட உற்பத்தியாகுற தரமான குஞ்சுகளைத் தாய்க்கோழியா வெச்சுக்குவோம்.

என்னோட மனைவி கார்த்திகா, சேலம் பகுதியில பிறந்து வளர்ந்தவங்க. அவங்களுக்குக் கோழி வளர்ப்புல நல்ல அனுபவம் உண்டு. அவங்களும் சேர்ந்து உழைக்கிறதாலதான் பண்ணையை வெற்றிகரமாக நடத்த முடியுது. கருங்கோழிக் குஞ்சுகளை 1 மாசத்துல இருந்து 2 மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செய்றோம். பொரிச்ச ஒரு நாள்ல நாட்டுக்கோழி குஞ்சுகள விற்பனை செய்திடுவோம்.

கருங்கோழிகளோட இறைச்சி, முட்டையில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருக்கு. அதனால, இதுக்கு நல்ல விலை கிடைக்குது. கருங்கோழியின் உடல், இறைச்சி, எலும்பு எல்லாம் கறுப்பு நிறத்துல இருக்கும். ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்துலயும், நாக்கு கருமை கலந்த சாம்பல் நிறத்துலயும் இருக்கும். சிலர் கருங்கோழியின் ரத்தமும் கறுப்பா இருக்கும்னு சொல்வாங்க. அது தவறு” என்ற சரவணன், நிறைவாகக் கோழிகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“ஒரு கருங்கோழி வருஷத்துக்கு 80 முட்டைகள் இடும். அதுல 60 முட்டைகள்தான் குஞ்சு பொரிக்கிறதுக்குத் தேறும். பொரிப்பான்ல வெச்சு எடுத்தா 40 குஞ்சுகள்தான் வளர்ப்புக்குத் தேறும். 31 கோழிகள்ல இருந்து வருஷத்துக்குச் சராசரியா 1,240 குஞ்சுகள் கிடைக்குது. ஒரு மாசம் வளர்த்து ஒரு குஞ்சு 200 ரூபாய்னு விற்பனை செய்றப்போ... வருஷத்துக்கு 2,48,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனம், மருந்துகள், மின்சாரம், போக்குவரத்துனு எல்லாச் செலவும்போக 1,24,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

இதேபோல 180 நாட்டுக்கோழிகள்ல இருந்து வருஷத்துக்கு 7,200 குஞ்சுகள் உற்பத்தி செய்றோம். ஒரு நாள் ஆன குஞ்சு 40 ரூபாய்னு விற்பனை செய்றப்போ, வருஷத்துக்கு 2,88,000 ரூபாய் கிடைக்குது. இதுல எல்லாச்செலவும் போக, வருஷத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்” என்றார்.

விற்பனைக்குக் கைகொடுக்கும் பசுமைச் சந்தை!

“பசுமை விகடன்ல வெளியாகுற பசுமைச் சந்தை மூலமாத்தான் கருங்கோழி குஞ்சுகள அதிகளவுல விற்பனை செய்றேன். இதோடு நாட்டுக்கோழிகள், குஞ்சுகளயும் விற்பனை செய்றேன். இப்போ நாட்டுக் கோழிகளுக்குச் சுற்றுவட்டாரத்திலேயே நல்ல கிராக்கி இருக்கிறதால, வியாபாரிகள் வாங்கிக்கிறாங்க.

இதேமாதிரி தீவன விதைக் கரணைகளையும் பசுமைச் சந்தை மூலமா விற்பனை செஞ்சிருக்கேன். என்னோட கோழி வளர்ப்புத் தொழில் வளர்ந்ததுக்குச் பசுமைச் சந்தை ஒரு முக்கியக் காரணம். கடந்த சில ஆண்டுகளாக என்னோட விற்பனை பசுமை விகடன் இதழ் மூலமாத்தான் நடந்துட்டு இருக்கு” என்றார் சரவணன்.

தீவனம் :

மக்காச்சோளத்தூள் 50%, தவிடு 39%, கடலைப்பிண்ணாக்கு 8%, தாது உப்புக்கலவை 2%, சமையல் உப்பு 1% என்ற அளவில் கலந்து, அவற்றை அரைத்துக் குஞ்சுகளுக்கான தீவனம் தயாரிக்க வேண்டும். குஞ்சுகளுக்குப் பிறந்த முதல் வாரம் தினமும் 5 கிராம்; இரண்டாவது வாரம் தினமும் 10 கிராம்; மூன்றாவது வாரம் தினமும் 15 கிராம் என வாரத்துக்கு 5 கிராம் அளவை அதிகரித்துக் கொடுக்க வேண்டும். வளர்ந்த கோழிகள் மற்றும் சேவல்களுக்குத் தினமும் 100 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு கோழிக்கும் தினமும் 5 கிராம் அளவு அசோலா கொடுத்துவந்தால், வளர்ச்சி நன்றாக இருக்கும். பண்ணையில் ஆங்காங்கே அகத்தி, வேப்பிலை, முருங்கைக்கீரை ஆகியவற்றைக் கலந்து கட்டித் தொங்கவிட்டால், மேய்ச்சலின்போது கோழிகள் விரும்பிச் சாப்பிடும்.

நிழல் உள்ள இடத்தில் 4 அடி விட்டம், 1 அடி உயரத்துக்குப் பழைய துணிகள், இலைதழைகள், மரத்துண்டுகள், பழைய சணல் சாக்குகள் ஆகியவற்றைப் போட்டுச் சாணிப்பால் தெளித்து, பிளாஸ்டிக் சாக்கைக் கொண்டு மூடிவிட வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் சாக்கைத் திறந்தால் ஏராளமான கறையான்கள் அங்கு இருக்கும். கோழிகள் கறையான்களை விரும்பிச் சாப்பிடும்.

பாரம்பர்ய வைத்தியம் :

20 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சீரகத்தூள், 2 எலுமிச்சைப்பழங்களின் சாறு ஆகியவற்றைக் கலந்து தினமும் கொடுத்துவந்தால், பெரும்பாலான நோய்கள் அண்டாது. இது 100 கோழிகளுக்குப் போதுமானதாக இருக்கும். வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கினால் 1 லிட்டர் தயிர் அல்லது மோரில் 250 கிராம் சின்ன வெங்காயத்தை நறுக்கிப்போட்டு 5 நாள்கள் ஊற வைத்துக் கொடுக்கலாம். இம்மருந்துகளை மழை மற்றும் பனிக்காலங்களில் கொடுக்கக் கூடாது.

இரண்டு மாதங்களுக்கு மேற்பட்ட கோழிகளுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாம். 100 கோழிகளுக்கு... 20 லிட்டர் தண்ணீரில் 60 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை தரலாம். இதனால், கோழிகளின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதோடு, முட்டைகளும் பெரிதாக இருக்கும். பஞ்சகவ்யா கொடுக்கும் நாள்களில் வேறு மருந்துகள் எதையும் கொடுக்கக் கூடாது.



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment