Wednesday 21 March 2018

கரும்புக்கு நடுவே சாம்பார் வெள்ளரி!

உற்சாக வருமானம் தரும் ஊடுபயிர்

ஊடுபயிருக்கான பயிர்.
110 நாள் வயது.
ஏக்கருக்கு 10 டன் மகசூல்.

'எந்த சாகுபடியாக இருந்தாலும், சரியான முறையில் ஊடுபயிர்களை நடவு செய்தால், கூடுதல் மகசூலோடு, கூடுதல் லாபத்தையும் பார்க்க முடியும்’ என்பதுதான் விவசாய வல்லுநர்களின் ஏகோபித்த கருத்து!

இது உண்மைதான் என்பதை, தங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, விரும்பிய பயிர்களை ஊடுபயிர்களாக சாகுபடி செய்து, விவசாயிகள் பலரும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் வரிசையில், சற்றே வித்தியாசமாக கரும்புக்கு இடையில் சாம்பார் வெள்ளரியைத் (சாம்பார், ஊறுகாய் என்று பயன்படுத்தப்படும் வெள்ளரி) தொடர்ந்து ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறார், தேனி மாவட்டம், குண்டல்நாயக்கன்பட்டி, 'கோடாங்கி’ முத்தையா.

கரும்புக் காட்டுக்குத் தண்ணீர் கட்டும் வேலையை செய்தபடியே நம்மிடம் பேசிய முத்தையா, ''எனக்கு அம்பது வயசாகுதுங்க. பரம்பரை பரம்பரையா விவசாயம்தான். பிறந்ததுல இருந்து கழனிக் காட்டுக்குள்ளதான் இருக்கேன். அதனால எல்லா வெள்ளாமையும் எனக்கு அத்துபடி. மொத்தம் 18 ஏக்கர் இருக்கு. கொஞ்சம் சரளை கலந்த செம்மண் பூமி. அதோட, கிணத்துப் பாசனமும் இருக்கறதால முழுக்கவும் கரும்பு விவசாயம்தான். இப்போ சொட்டுநீரையும் போட்டுட்டேன். அதனால தண்ணிச் செலவும் குறைஞ்சுடுச்சு.

வட்டா வட்டம் கரும்பு விதைச்சதும், ஏதாவது காய்கறியை ஊடுபயிரா போட்டுடுவேன். கரும்பு கணு வெக்க மூணு மாசம் ஆகும். அதனால மூணு மாச பயிரை ஊடு வெள்ளாமை வெச்சோம்னா... கணு வெக்கறதுக்குள்ளாறயே ஒரு லாபம் பாத்துடலாம்.

கரும்புச் செலவை ஈடுகட்டும் ஊடுபயிர்!

பக்கத்துத் தோட்டத்துக்காரர் சாம்பார் வெள்ளரியை ஊடுபயிரா போட்டிருந்தார். அதைப் பார்த்துட்டு, இந்த வட்டம் கரும்பு போட்டவுடனே அதையே நானும் ஊடுபயிரா விதைச்சுட்டேன். இப்போதைக்கு இதுக்கு நல்ல விலை கிடைச்சுக்கிட்டிருக்கு. அதுவுமில்லாம ரொம்ப பண்டுதமெல்லாம் கிடையாது. ரெண்டு களை, ரெண்டு மருந்து, ரெண்டு உரம் அவ்வளவுதான். அருமையான மகசூல் கிடைச்சுடும். கரும்புக்கான செலவெல்லாம் போக, லாபமும் கிடைச்சுடும். கரும்புல கிடைக்கிற காசு கூடுதல் போனஸ் மாதிரிதான்'' என்றவர், சாகுபடி பாடத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒன்றரை அடி இடைவெளி!

'செம்மண் பூமியில் சாம்பார் வெள்ளரி நன்றாக வளரும். இதன் வயது 110 நாட்கள். தனிப்பயிராகவும் செய்யலாம். நிலத்தை இரண்டு, மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு பத்து மாட்டு வண்டி என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, மீண்டும் ஒரு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, கரும்புக்கு எடுப்பது போல நாம பாத்தி எடுத்து, சொட்டு நீர்க்குழாய்களை அமைத்து, கரும்பு விதைக் கரணைகளை நடவு செய்ய வேண்டும். பிறகு, பாத்திக்கு இருபுறமும் ஒன்றரை அடி இடைவெளியில் இரண்டிரண்டு விதைகளாக சாம்பார் வெள்ளரியை விதைத்து, ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கரும்பு விதைக் கரணைக்கு அருகில்கூட விதைக்கலாம். ஏக்கருக்கு 300 கிராம் விதைகள் தேவைப்படும்.

ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் சாம்பார் வெள்ளரி முளைத்து வரத் தொடங்கும். தொழுவுரம் போட்டிருப்பதால், களைகளும் வேகமாக முளைத்து வரும். 15 முதல்

20 நாட்களுக்குள் ஒருமுறை பூச்சிக்கொல்லி தெளித்து, முதல் களை எடுக்க வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 50 கிலோ யூரியா, 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றைத் தூவிவிட்டு, செழிம்பாகத் தண்ணீர் கட்ட வேண்டும்.

30 முதல் 35 நாட்களுக்குள் மீண்டும் ஒரு முறை பூச்சிக்கொல்லி தெளித்து, இரண்டாம் களை எடுக்க வேண்டும். பின்பு, ஏக்கருக்கு 50 கிலோ என்ற கணக்கில் 17:17:17 கலப்பு உரத்தைத் தூவி செழிம்பாகத் தண்ணீர் கட்ட வேண்டும்.

60-ம் நாளில் நல்ல அறுவடை!

இதற்கு மேல் களை எடுக்கத் தேவை இருக்காது. வேறு உரமோ, பூச்சிக்கொல்லியோ தேவையில்லை. பயிரில் ஏதாவது பூச்சி, நோய் தாக்கியது தெரிந்தால் மட்டும் மருந்தடிக்க வேண்டும். ஊட்டம் குறைந்தால் மட்டும் உரமிட வேண்டும். 35-ம் நாளுக்கு மேல் பூவெடுத்து, காய்க்க தொடங்கும். 60-ம் நாளில் இருந்து நன்றாக மகசூல் கொடுக்க ஆரம்பித்து விடும். அடுத்த 50 நாட்கள் வரை அறுவடை செய்யலாம்.

வாரத்துக்கு இரண்டு பறிப்பு என 14 அல்லது 15 பறிப்புகள் வரும். முதல் நான்கு பறிப்புகளின்போது, தலா அரை டன் காய்கள் கிடைக்கும். அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு பறிப்புக்கும் ஒன்றரை டன் வரை காய்கள் கிடைக்கும். கடைசி நான்கைந்து பறிப்புகளில் காய்கள் கொஞ்சம் குறைவாகத்தான் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும், 10 டன் முதல் 15 டன் வரை காய்கள் கிடைக்கும். சராசரியாக ஏக்கருக்கு 12 டன்னுக்குக் குறையாமல் கிடைக்கும். அறுவடை முடிந்தவுடன் வெள்ளரிக் கொடிகளை அப்படியே நிலத்தில் போட்டுவிட்டால்... மட்கி கரும்புக்கு உரமாகி விடும்.

ஒப்பந்த அறுவடை!

சாகுபடி பாடத்தை முடித்த முத்தையா, வருமானம் பற்றிச் சொல்லத் தொடங்கினார். ''சாம்பார் வெள்ளரிக்கு கேரளாவுல நல்ல கிராக்கி இருக்குது. அதனால தோட்டத்துக்கே வந்து வியாபாரிங்க எடுத்துக்கிட்டுப் போயிடுறாங்க. எப்பவும் கிலோ அஞ்சு ரூபால இருந்து பத்து ரூபா வரைக்கும் விலை போகும். மத்த காய் மாதிரியே இதுக்கும் எப்பவாவது திடீர்னு விலை சரிஞ்சுடும். சந்தையில வரத்து அதிகமாயிடுச்சுனா... மூணு ரூபாய்க்குக்கூட வந்துடும்.

இப்போ மார்க்கெட் நல்லா இருக்கறதால வியாபாரிங்க வந்து கான்ட்ராக்ட் (ஒப்பந்தம்) போட்டுக்கறாங்க. பதினெட்டு ஏக்கர்ல விளைஞ்சு நிக்கற சாம்பார் வெள்ளரியை, நாலு லட்ச ரூபாய்னு பேசி மொத்தமா விட்டுட்டேன். அவங்களே ஆள் வெச்சு அறுவடை பண்ணிக்குவாங்க. நான் கான்ட்ராக்ட் பேசினப்போ கிலோ அஞ்சு ரூபாய்க்குதான் போயிட்டுருந்துச்சு.

அதனால, ஏக்கருக்கு 22 ஆயிரம் ரூபாய்ங்கற கணக்குல ஒப்பந்தம் போட்டேன். இதன்படி கணக்குப் போட்டா... செலவெல்லாம் போக, ஏக்கருக்கு சுமாரா 14 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும். நாமளே வித்திருந்தா... சராசரியா 10 டன் மகசூல்னு கணக்கு போட்டாலே... கிலோ 6 ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு 15 ஆயிரம்னு வெச்சுக்கிட்டாலும், 45 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்'' என்று சொன்னார் முத்தையா.

தொடர்புக்கு :
முத்தையா,
அலைபேசி (செல்போன்): 99527-71134

இயற்கையிலும் இனிக்கும் வெள்ளரி !
'சாம்பார் வெள்ளரி' என்றாலே... ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

சாம்பார் வெள்ளரிதான் என்றில்லை, மற்ற ரக வெள்ளரி என்றாலும்கூட ரசாயன முறைகளில் சாகுபடி செய்யப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது. இதற்கு நடுவே... ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, பூண்டுக் கரைசல் என்று இயற்கை இடுபொருட்களைத் தெளித்து, வெள்ளரி சாகுபடி செய்து கொண்டிருக்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், கிராமத்திமேடு விவசாயி ஆறுமுகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை விவசாய முறையில் வெள்ளரி பயிரிட்டு வரும் ஆறுமுகத்தின் சாகுபடி தொழில்நுட்பங்கள் இதோ...

கஞ்சியில் விதைநேர்த்தி!

'வெள்ளரி சாகுபடி செய்வதற்கு தை பட்டம்தான் சிறந்தது. நல்ல வடிகால் வசதியோடு இருக்கின்ற எல்லா வகை நிலங்களும் இதற்கு ஏற்றது. அதிகமான மணல் மற்றும் உப்புத் தன்மை இருக்கின்ற மண் வகைகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

விதைகளை நடவு செய்வதற்கு, நிலத்தை குறுக்கு-நெடுக்காக நான்கு முதல் ஐந்து உழவு செய்ய வேண்டும். பின்பு, எட்டுக்கு எட்டு அடி இடைவெளி கொடுத்து, நீளம், அகலம், ஆழம் அனைத்தும் ஒரு அடி இருக்கும் வகையில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 550 முதல் 600 குழிகள் வரை கிடைக்கும். ஒவ்வொரு குழிக்கும் அரைக் கூடை எருவைப் போட்டு, மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 250 கிராம் வெள்ளரி விதைகள் தேவைப்படும். வடித்தக் கஞ்சியில் 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். விதைகளை இந்தக் கரைசலில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். பிறகு, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, குழிக்கு ஏழு விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும். எலிகளாலும், செடி அழுகல் காரணமாகவும் ஒன்றிரண்டு விதைகள் பழுதானாலும், சராசரியாக குழிக்கு ஐந்து செடிகள் நன்கு முளைத்து வரும்.

பாசனத்தோடு ஜீவாமிர்தம்!

நடவு செய்த மூன்றாம் நாளில் முளைப்பு எடுத்துவிடும். பத்து நாட்கள் வரை காலை நேரத்தில் தினம் ஒருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும். 15-ம் நாளில் இருந்து 20-ம் நாளில் கொடியை ஒதுக்கிவிட்டு, மீதி இருக்கும் இடத்தை மண் வெட்டியால் கொத்தி, களைகளை நீக்க வேண்டும். பின் கொடியைச் சுற்றி அரை அடி ஆழத்துக்கு குழி எடுத்து, அரை அன்னக்கூடை வீதம் எரு வைத்து, மண்ணை இட்டு குழியை மூடிவிட வேண்டும். மண்ணின் தண்ணீர் பிடிப்புத் தன்மைக்கு ஏற்ப, நான்கு முதல் ஏழு நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கூடவே, ஏக்கருக்கு

10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலையும் தண்ணீரோடு கலந்துவிட மறக்கக்கூடாது. 30-ம் நாளில் இருந்து தொடர்ந்து பத்து நாள் இடைவெளியில் பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளித்தால், செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

20-ம் நாளில் இருந்து செடியில் பச்சைப் புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதற்கு ஒரு வாரம் பூண்டுக் கரைசல், அடுத்த வாரம் மூலிகைப் பூச்சிவிரட்டி என்று மாற்றி மாற்றி தெளித்து வரவேண்டும். பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

35-ம் நாளில் அறுவடை!

25-ம் நாளில் பூ எடுக்கும். 35-ம் நாளில் இருந்து காய் பறிப்புக்கு வந்துவிடும். தொடர்ந்து 60 நாட் களுக்கு காய் பறிப்பு செய்யலாம். ஆரம்பத்தில் தினம் ஒரு முறை காய் பறிப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காய் முற்றி, விலை குறைந்துவிடும். தினமும் மூன்று முதல் நான்கு கூடை வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும். கூடைக்கு 20 கிலோ முதல் 25 கிலோ அளவுக்கு வெள்ளரி இருக்கும். சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்று கூடை வெள்ளரி வீதம்

60 நாட்களுக்குக் குறைந்தபட்சம் 180 கூடை கிடைக்கும் (3,600 கிலோ). கூடை 200 ரூபாய் வீதம் மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் கையில் நிற்கும்’.

இயற்கையிலும் முடியும்!

சாம்பார் வெள்ளரியை பெரும்பாலும் ரசாயன முறையில்தான் பயிரிட்டு வருகின்றனர். இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்களை அரிதாகக் கூட காண முடியவில்லை. 'ஏன் இப்படி, இதை இயற்கை முறையில் செய்ய முடியாதா என்ன?' என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறை விஞ்ஞானி முனைவர். வைத்தியநாதனிடம் கேட்டோம்.

''பலவிதமான காய்கறி பயிர்களைப் போலவே சாம்பார் வெள்ளரியையும் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தியே நிச்சயம் சாகுபடி செய்யலாம். ரசாயனத்தைப் பயன்படுத்தித்தான் செய்யமுடியும் என்றில்லை'' என்று சொன்னார்.

இதுகுறித்து, சாம்பார் வெள்ளரி விவசாயி முத்தையாவிடம் தெரிவித்தபோது, ''இப்பகூட மத்தவங்களைவிட, இயற்கை உரத்தைத்தான் நான் நிறைய பயன்படுத்துறேன். அடுத்த தடவையே சோதனை முயற்சியா முழுக்க இயற்கை முறையில செஞ்சு பார்க்கிறேன். நல்ல லாபம் கிடைக்கும்னு தெரிஞ்சா... அதையே தொடர்ந்துட வேண்டியதுதான்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு:
ஆறுமுகம்,
அலைபேசி (செல்போன்): 99653-22418.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment