Tuesday 27 March 2018

வளமான வருமானம் கொடுக்கும் வாழை… – ஆண்டு முழுவதும் அறுவடை!

சந்தையில் எப்போதும் தேவையுள்ள பழங்களில் ஒன்று வாழைப்பழம். வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் ரஸ்தாளி, மொந்தன், பூவன் ஆகிய ரகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அதனால், வாழை விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்தவகையில், பூவன் வாழைச் சாகுபடியில் ஈடுபட்டுக் கணிசமான லாபம் ஈட்டி வருகிறார் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலூகாவில் உள்ள அரும்பருத்தி கிராமத்தில் விவசாயம் செய்துவரும் வின்சென்ட்.

ஒரு காலை வேளையில் வெங்காயம் பயிரிடுவதற்காக நிலத்தைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வின்சென்ட்டைச் சந்தித்துப் பேசினோம்.

எனக்குச் சொந்த ஊர் திருச்சி. சின்ன வயசுல அப்பாகூடச் சேர்ந்து விவசாயம் செய்த அனுபவம் உண்டு. 1987-ம் வருஷம் சென்னைக்கு வந்து ‘டிரைவர்’ வேலை பார்க்க ஆரம்பிச்சேன். டிரைவர் வேலை பார்த்தாலும், எனக்குள் இருந்த விவசாய ஆர்வம் குறையல. நான் வேலைப் பார்த்த வீடுகள்ல சின்னதா மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம்னு அமைச்சுப் பராமரிச்சுட்டிருந்தேன். ஓய்வு நேரங்கள்ல தோட்டத்துல இருக்குற செடிகளைப் பராமரிப்பேன். எட்டு வருஷத்துக்கு முன்னாடி, நான் டிரைவர் வேலை பார்த்த வீட்டில் ஒரு மாடித்தோட்டம் போட்டேன். அதைப்பார்த்த உரிமையாளர், ‘விவசாயம் செய்ய ஆசை இருக்கா’னு கேட்டாரு. நான், என்னோட ஆசையைச் சொன்னதும், நிலம் தேட ஆரம்பிச்சார். மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்த நிலத்தை வாங்கி, என்னையே விவசாயம் பார்க்கச் சொல்லிட்டார்.

இது மூன்றரை ஏக்கர் நிலம். கிணத்துப் பாசனம்தான். ஆரம்பத்துலயே இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு முடிவு செஞ்சுட்டதால ரசாயன உரம், பூச்சிக் கொல்லிக்கு இங்க வேலையே இல்லை. ‘நல்லக்கீரை’ பண்ணைக்குப்போய் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். வெங்காயம், கீரை, வாழை, நெல்னு சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். நிலத்தோட உரிமையாளர் எதுலயும் தலையிடமாட்டார். அடிக்கடி வந்து பார்த்துட்டு இங்க விளையுறதுல கொஞ்சம் வாங்கிட்டுப் போவார்.

எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துட்டதால, நான் நினைக்கிற மாதிரி இயற்கை விவசாயம் செய்ய முடியுது. போன மாசம்தான் மாப்பிள்ளைச் சம்பா நெல் அறுவடை முடிச்சோம். இப்போ 20 சென்ட் நிலத்துல வெங்காயம் நடுறதுக்கான வேலை நடக்குது. 20 சென்ட் நிலத்துல கீரை, காய்கறிகள் இருக்கு. 40 சென்ட் நிலத்துல பூவன் வாழை இருக்கு. வாழையில கொஞ்சம் கொஞ்சமா அறுவடை பண்ணிட்டு இருக்கேன்” என்ற வின்சென்ட், வாழைத்தோப்புக்குள் நம்மை அழைத்துச் சென்று மரங்களைக் காட்டியபடியே பேசினார்.

“40 சென்ட் நிலத்துல 70 வாழை மரங்கள்தான் இருக்கு. ஆனா, இந்த அளவு நிலத்துல 900 கன்றுகளுக்குமேல நடலாம். அந்தக் காலத்துல ‘வண்டியோட வாழை’னு ஒரு பழமொழி சொல்வாங்க. அதாவது வாழைத்தோப்புல வண்டி நுழையுற அளவுக்கு இடைவெளி இருக்கணும்னு சொல்வாங்க. இந்தமாதிரி அதிக இடைவெளி இருந்தாதான், பக்கக்கன்றுகள் நிறைய உருவாகும். இந்தப் பக்க கன்றுகள் மூலமா, ஒரே நடவுல கூடுதல் வருமானம் எடுக்க முடியும். இப்போ மரத்துக்கு மரம் 10 அடி, வரிசைக்கு வரிசை 15 அடி என்ற இடைவெளியில நட்டுருக்கேன். வாழை நடவு செஞ்சதும், ஊடுபயிரா மிளகாய், கத்திரினு போட்டு அறுவடை பண்ணிட்டேன். வாழை மரத்தைச் சுத்தி வர்ற பக்கக்கன்றுகளைக் கழிக்கவே மாட்டேன். அத்தனை கன்றுகளையும் அப்படியே விட்டுடுவேன். அதே மாதிரி, தார் அறுவடை பண்ணுன மரங்களையும் வெட்டமாட்டேன். அதையும் அப்படியே விட்டுடுறதால அது மட்கிப் பக்கக்கன்றுகளுக்கு உரமாகிடும். இலைகளையும் அறுக்கமாட்டேன். அதனால, வாழை மரங்கள் செழிப்பா வளருது. பக்கக்கன்றுகள்லயும் இப்போ தார் வந்துக்கிட்டிருக்கு. ஒவ்வொரு வாழைத்தாரும் 12 கிலோவுல இருந்து 18 கிலோ வரைக்கும் எடை இருக்குது.

வாழை மரங்களுக்கு இடையில மூடாக்குப் போட்டுருக்கேன். அதனால, நிலத்துல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். மூடாக்கு மட்கி மண்ணுல கலந்து உரமாகிடும். இதுவரை இங்க எந்தப் பயிருக்கும் பூச்சிவிரட்டி உபயோகப் படுத்தினதே இல்லை. பயிர்ல ஏதாவது நோய் அறிகுறி தெரிஞ்சா நாட்டுமாட்டுச் சிறுநீரைத் தண்ணில கலந்து தெளிச்சுவிட்டுடுவேன். ஊட்டத்துக்கு அமுதக்கரைசலைப் பயன்படுத்திட்டுருக்கேன். அடியுரமா எப்பவுமே நாட்டு மாட்டு எருதான் போட்டுட்டு இருக்கேன். புங்கனூர்குட்டை ரக மாடும், கன்னுக்குட்டி ஒண்ணும் வெச்சுருக்கோம்.

அது மூலமா கிடைக்கிற சாணம், சிறுநீரைத்தான் இடுபொருள் தயாரிக்கப் பயன்படுத்துறேன். கிணத்துல தண்ணீர் நிறைய இருந்தா வாய்க்கால் மூலமா பாசனம் பண்ணுவேன். தண்ணி குறைஞ்சா தெளிப்புநீர்க் குழாய் (ஸ்பிரிங்ளர்) மூலமா பாசனம் பண்ணுவேன்” என்ற வின்சென்ட் வாழை மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“வாழை நட்டு பதினஞ்சு மாசம் ஆகுது. தாய் மரங்கள், பக்கக்கன்றுகள்னு எல்லாத்துலயும் தேவையைப் பொறுத்துத் தார்களை அறுவடை செஞ்சு விற்பனைக்கு அனுப்பிட்டுருக்கேன். இதுவரை 90 தார்களை அறுவடை செஞ்சுருக்கேன். மொத்தம் 1,350 கிலோ அளவுக்கு பழங்கள் கிடைச்சுருக்கு. ஒரு கிலோ 40 ரூபாய்னு காஞ்சிபுரத்துல இருக்குற ஆர்கானிக் கடைக்குக் கொடுத்துக்கி ட்டுருக்கேன். அந்த வகையில இதுவரை 54,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுவரை 15,500 ரூபாய் செலவு பண்ணிருக்கேன். மீதி 38,500 ரூபாய் லாபமாகக் கிடைச்சுருக்கு. இனிமேயும் தொடர்ந்து வருமானம் கிடைச்சுட்டே இருக்கும். பக்கக்கன்றுகள் நிறைய இருக்குறதால வருஷத்துக்கு 300 தார்கள் வரை கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார் வின்சென்ட்.

தொடர்புக்கு :
வின்சென்ட்,
செல்போன்: 88702 9050

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

40 சென்ட் நிலத்தில் பூவன் வாழைச் சாகுபடி செய்யும் விதம் குறித்து வின்சென்ட் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…

தேர்வுசெய்த நிலத்தை நன்கு உழுது மூன்று நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு 2 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, ஓர் உழவு செய்து 3 நாள்கள் காய விட வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 15 அடி, மரத்துக்கு மரம் 10 அடி என்ற அளவு இடைவெளியில் குழிகள் எடுத்துக் குழிக்கு ஒரு கன்று என்ற விகிதத்தில் விதைக்கன்றுகளை நடவுசெய்ய வேண்டும். விதைக்கன்றுகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோவுக்குமேல் எடை இருக்க வேண்டும். விதைக்கன்றுகளை அமுதக்கரைசலில் மூழ்க வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி நடவுசெய்தால், வேர் சம்பந்தமான நோய்கள் வராது. நடவு செய்த மறுநாளிலிருந்து நிலம் காயாத அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். அதேநேரத்தில் தூர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கக் கூடாது. நடவுசெய்த 7-ம் நாள், கன்றுகளைச் சுற்றி மண் அணைத்துவிட வேண்டும். வாரம் ஒருமுறை ஒவ்வொரு கன்றின் தூர்ப்பகுதியிலும் ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை ஊற்ற வேண்டும். 40-ம் நாளுக்குமேல் இலைகள் வரும். தொடர்ந்து ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்துவந்தால் போதும். 12-ம் மாதத்துக்குமேல் வாழை அறுவடைக்கு வந்துவிடும்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment