Wednesday 21 March 2018


மாடுகளில் நோய் மேலாண்மை பகுதி - 3




ஒட்டுண்ணியால்
ஏற்படும் நோய்கள் :

*
உட்புற ஒட்டுண்ணி நோய்
*
தைலேரியோசிஸ்
*
பெபிசியோசிஸ்

ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள் :

உட்புற மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகளால் கறவை மாடுகளில் அதிகமான பொருட்சேதம் ஏற்படுகிறது.

உட்புற ஒட்டுண்ணி நோய் :

* நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்களால் ஏற்படும் நோய்கள்

* கறவை மாட்டின் உணவுப் பாதையில் வாழும் நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் போன்றவைகளும் காக்சிடியா எனப்படும் ஓரணு வகை ஒட்டுண்ணியும் மாட்டின் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்து உற்பத்தியைக் குறைக்கின்றன. இத்தகைய ஒட்டுண்ணிகள், மாட்டின் இரத்தத்தை உறிஞ்சியோ அல்லது மாட்டிற்கு சேரவேண்டிய உணவுப் பொருட்களைத் தாம் உண்டோ அல்லது உட்கொள்ளப்படும் உணவு சரிவர குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்தோ அல்லது சில நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்து குடற்பகுதியைத் தாக்கியோ மாட்டின் நலத்தைக் கெடுக்கின்றன.

நோய் அறிகுறிகள் :

* கன்றுகள், மாடுகள் நாளடைவில் மெலிந்து சோகையுற்றுக் காணப்படும்.

* சரிவர தீவனம் உட்கொள்ளாது.

* பற்களை அடிக்கடி நறநறவென்று கடித்தல், உடலில் அதிக ரோமம் வளர்தல், ரோமம் சிலிர்த்துக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

* வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

* சாணம், தண்ணீர் போல இருப்பதுடன் நுரையும் காணப்படும். சிகிச்சை செய்யாவிடில் மாடுகள் இறந்துவிடும்.

தடுப்பும் பாதுகாப்பும் :

* சுகாதார விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். போதிய ஊட்டச்சத்து அளிக்கவேண்டும்.

* தண்ணீர், தீவனம், புல் போன்றவற்றில் உள்ளுறை ஒட்டுண்ணியின் முட்டையோ அல்லது லார்வாவோ இருக்கக்கூடாது.

* சாணத்தை அவ்வப்போது அப்புறப்படுத்தவேண்டும். கம்போஸ்ட் செய்த சாணத்தை எருவாகப் பயன்படுத்தவேண்டும்.

* இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சாணத்தை, பரிசோதனை செய்து உள்ளுறை ஒட்டுண்ணி இருப்பின் மருந்து கொடுக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

தைலேரியோசிஸ் :

* இந்நோய் கலப்பினப் பசுக்களைத் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய், தைலேரியா ஆனுலேட்டா என்ற ஓரணு ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.

* இந்நோய், உண்ணி கடிப்பதின் மூலம் ஒரு மாட்டில் இருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது. உண்ணி அதிகமாக உள்ள இடங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. நோயுற்ற மாட்டை உண்ணிகள் கடித்து விட்டு நோயில்லா மாட்டை மீண்டும் இரத்தத்தை உறிஞ்ச கடிக்கும் சமயத்தில் இந்நோய் மற்ற மாடுகளுக்கும் பரவுகிறது.

நோய் அறிகுறிகள் :

* நோயுற்ற மாடுகளில் அதிகக் காய்ச்சல் இருக்கும். சுமார் ஒரு வாரத்திற்கு காய்ச்சல் குறையாது.

* தோலின் அடிப்பகுதியிலுள்ள நிணநீர்க் கட்டிகள் வீங்கிக் காணப்படும்.

* காது, கழுத்துப் பகுதிகளில் உண்ணிகள் அதிகம் காணப்படும்.

* சாணம் முதலில் கெட்டியாகவும், பின்பு இளகலாகவும், இரத்தம் கலந்தும் இருக்கும். வயிற்றுப் போக்கு இருக்கும்.

* சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் காமாலை அறிகுறிகள் தென்படும்.

* காய்ச்சல் அதிகமிருந்தாலும் மாடு, தீவனம் எடுத்துக் கொண்டிருக்கும்.

* சினைப் பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும்.

* இரத்தச் சோகை ஏற்பட்டு மாடு மெலிந்து 10 நாட்களில் இறந்து விடும்.

தடுப்பும் பாதுகாப்பும் :

* இந்நோயைத் தடுக்க உண்ணியைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்ணியைக் கொல்ல சுமத்தியான், மாலத்தியான் போன்ற மருந்துக் கரைசலை 0.5-1 என்ற அளவில் தெளிக்கவேண்டும். பூட்டாக்ஸ் என்ற மருந்தை 1 லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மாடுகளை இம்மருந்து கொண்டு குளிப்பாட்டலாம். உண்ணி தங்கும் செடி, புதர், சுவற்றின் கீரல், ஓட்டை, சந்து போன்றவற்றில் மருந்தைத் தெளிக்கவேண்டும்.

* கூடுதல் தீவனம், நல்ல பராமரிப்பு போன்றவற்ற வழங்கி மாட்டைக் காப்பாற்றி இலாபம் பெறலாம். நோயிலிருந்து தப்பிய மாடுகள், பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகலாம். இரத்தச் சோகைக்கு மருந்து கொடுக்கவேண்டும்.

பெபிசியோசிஸ் :

இந்நோய், பெபிசியா பைசெமினா என்ற ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும். இது, உண்ணிகள் கடிப்பதால் ஏற்படும் நோயாகும். உண்ணிகள் அதிகமாக உள்ள இடங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. கலப்பினப் பசுக்களில் இந்நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது.

நோய் அறிகுறிகள் :

* காய்ச்சல் அதிகமாக இருக்கும்.

* சிறுநீர், காப்பி நிறத்தில் வெளிவரும்.

* மாட்டின் கழுத்துப்பகுதியில் உண்ணிகள் அதிகமாக இருக்கும்.

* இரத்தச்சோகை ஏற்பட்டு மாடு மெலிந்து 7-10 நாட்களில் இறந்து விடும்.

தடுப்பும் பாதுகாப்பும் :

* உண்ணியைக் கட்டுப்படுத்த வேண்டும். மேற்கூறிய உண்ணிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

* நோயுற்ற மாடுகளுக்கு மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்ளலாம்.

* இரத்தச்சோகைக்கு மருந்து கொடுக்கவேண்டும்.

* உண்ணிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றவேண்டும்.

ஆதாரம்: தமழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment