Tuesday 13 March 2018

''பதிமுகம் என்று ஒரு வகை மரம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதன் பயன்கள் என்ன... தமிழ்நாட்டில் வளர்க்க முடியுமா?''

மரம் வளர்ப்பில் முன்னோடியாக இருக்கும் 'மரம்’ கருணாநிதி பதில் சொல்கிறார்.

''இது மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மரம். கேரள மாநிலத்தில் பதிமுகம் மரம் இல்லாத வீட்டைப் பார்ப்பது அரிது. வீட்டுக்கு ஐந்து மரங்கள் வரைகூட வளர்ப்பார்கள். இதில் கொருக்காப்புளி மரத்தைப் போல முள் இருப்பதால், வேலி ஓரமாக வளர்ப்பார்கள். அம்மாநில மக்கள் சீரகம், வெட்டி வேர் உள்ளிட்ட பல வகை மூலிகைகளோடு பதிமுகத்தின் பட்டை, கட்டைகளை கலந்து ஊற வைத்த நீரைத்தான் பெரும்பாலும் அருந்துவார்கள். ஆகையால்தான் பதிமுகம் வீடுகள் தோறும் வளர்க்கப்படுகின்றன. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திலும்கூட பதிமுகம் மரத்தின் கட்டை பகுதி பயன்படுத்தப்படுகின்றன. பலவிதமான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு என்பதுதான் இதற்கு காரணம். பிராந்தி, விஸ்கி... போன்ற மதுபானங்கள், இனிப்பு வகைகள், கேக், குளிர்பானம் போன்றவற்றுக்கு இயற்கை நிறமூட்ட பதிமுகம் பயன்படுகிறது. இதன் மகத்துவத்தை வெளிநாட்டினர் அறிந்து இருப்பதால், வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நடவு செய்து ஏழு முதல் பத்து ஆண்டுகளில் மரத்தை வெட்டிப் பயன்படுத்தலாம். இது வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. தமிழ்நாட்டில் இதை பெரியளவில் யாரும் பயிர் செய்யவில்லை. பாலக்காட்டில் இருக்கும் 'தி பார்மிங் டிரஸ்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு, பதிமுகம் சாகுபடியை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பாலக்காடு பகுதியில் பதிமுகத்தை வளர்க்கும் விவசாயிகள் நிறைய உள்ளனர். ஒரு ஏக்கரில் பயிர் செய்தால், பத்து ஆண்டுகளில் பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.''

தொடர்புக்கு : The farming Trust Of India,329, Marutha Road, Palakkad, Kerala-678007. Ph: 0491- 2572246

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment