Saturday 24 March 2018

ஊடுபயிரில் உன்னத லாபம்... - உற்சாக விளைச்சல் தரும் இயற்கை நுட்பம்!

எந்தப்பயிரைச் சாகுபடி செய்தாலும் அதற்கு ஒத்த பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவது மிக அவசியம். ஊடுபயிர்கள் உயிர் மூடாக்காக அமைந்து மண்ணில் சத்துகளை நிலைநிறுத்துவதோடு, கூடுதல் வருமானத்துக்கும் வழிவகுக்கின்றன. அந்த வகையில், தென்னந்தோப்பில் ஊடுபயிராக அரசாணி (பரங்கிக்காய்) மற்றும் சுரைக்காய் ஆகிய காய்களைச் சாகுபடிசெய்து வருகிறார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கோவிந்தராஜன்.

அவினாசியிலிருந்து புஞ்சைப்புளியம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தண்டுக்காரன்பாளையம் எனும் கிராமத்தில்தான் கோவிந்தராஜனின் பண்ணை உள்ளது. ஒரு பகல்பொழுதில் பண்ணையிலிருந்த கோவிந்தராஜனைச் சந்தித்தோம்.

“எங்க குடும்பத்துக்கு இங்கே கிணத்துப் பாசனத்தோடு 12 ஏக்கர் தோட்டம் இருக்கு. அதுல 3 ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. ஒவ்வொரு ஏக்கர்லயும் மஞ்சள், தேன்வாழை, குச்சிக்கிழங்கு, பப்பாளி, தக்காளினு போட்டிருக்கேன். பலவிதமான மரக்கன்றுகளை 3 ஏக்கர் நிலத்துல நட்டு வெச்சுருக்கேன். ஒரு ஏக்கர் நிலத்தை மல்பெரி நடவுசெய்யத் தயார் பண்ணிட்டுருக்கேன். இதோடு தென்னந்தோப்புல ஊடுபயிரா ஒரு ஏக்கர்ல அரசாணியும் (பரங்கிக்காய்), இன்னொரு ஏக்கர்ல தம்புரா சுரைக்காயும் இருக்கு. மஞ்சள் இன்னும் அறுவடைக்கு வரலை. தேன்வாழை, பப்பாளி, தக்காளி, குச்சிக்கிழங்கு நாலும் வெள்ளாமை முடியுற கட்டத்துல இருக்கு. அரசாணி, சுரைக்காய் ரெண்டுலயும் இப்போ காய் பறிச்சுட்டுருக்கேன்” என்ற கோவிந்தராஜன் தொடர்ந்தார்... “நான் மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசலைப் பயிற்சியின் மூலம் தயாரிக்கக் கத்துக்கிட்டேன். இந்தக் கரைசலில் நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்வதன் மூலமாகப் பயிர் வளர்வதற்கான வளர்ச்சியூக்கியாகக் கரைசல் மாறிவிடும். இந்த மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசல் மூலமா, ரசாயன உரங்கள்ல கிடைக்கிற எல்லாச் சத்துக்களையுமே பயிருக்குக் கொடுக்க முடியும். அதனால, பயிர் நல்லா விளைஞ்சு வருது.

விவசாயிகள் சிலர் இணைஞ்சு ‘பசுமைப் பேராயம்’ங்கிற அமைப்பை ஆரம்பிச்சுருக்கோம். முழுக்க முழுக்க இயற்கை விவசாயிகளால் தொடங்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட அமைப்பு. அந்த அமைப்புக்கு இப்போ நான் செயலாளரா இருக்கேன்.

அந்த அமைப்பு மூலமா இயற்கை விவசாயிகள்கிட்ட காய்கறிகளைக் கொள்முதல் செஞ்சு, வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்புறோம். என்னோட காய்கறிகளையும் இந்த அமைப்பு மூலமா விற்பனை செய்றதால, இடைத்தரகர் இல்லாமல், சந்தை விலையைவிடக் கூடுதல் விலை கிடைக்குது.

இது இல்லாம, என்னோட பண்ணையில விளையுற காய்கறிகளை வண்டியில வெச்சு நேரடியாவும் விற்பனை செய்றேன். நெடுஞ்சாலையிலேயே தோட்டம் இருக்குறதால நிறைய பேர் தேடி வந்து எங்கிட்ட காய் வாங்கிட்டுருக்காங்க. அது மூலமா கணிசமான லாபம் கிடைக்குது” என்ற கோவிந்தராஜன் நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.

“அரசாணி, சுரைக்காய் ரெண்டுலயுமே 90-ம் நாள்ல இருந்து காய் பறிக்கலாம். அடுத்த 90 நாள் வரை வாரம் ரெண்டு தடவை காய் பறிக்கலாம். போன முறை ஊடுபயிராகப் போட்டதுல 180 நாள்ல 5 ஆயிரம் கிலோ அரசாணிக்காய் கிடைச்சது.

ஒரு கிலோ 12 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அதேபோலச் சுரைக்காய்ல 3 ஆயிரம் கிலோ மகசூல் கிடைச்சது. ஒரு கிலோ 15 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. மொத்தம் ரெண்டு ஏக்கர்ல போட்ட ஊடுபயிர் மூலமா 180 நாள்ல 1,05,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல உழவு, இடுபொருள், போக்குவரத்துனு எல்லாச் செலவும் சேர்த்து 15 ஆயிரம் ரூபாய் போக, 90 ஆயிரம் ரூபாய் லாபமா நின்னது” என்று சொன்ன கோவிந்தராஜன், காய்கறிகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு விற்பனைக்குக் கிளம்ப ஆயத்தமானார்.

மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசல்!

மேம்படுத்தபட்ட நுண்ணுயிர்க் கரைசல் தயாரிக்கும்முறை குறித்துப் பேசிய கோவிந்தராஜன், “10 அடி நீளம், 4 அடி உயரம், 4 அடி அகலம் என்ற அளவில் சிமென்ட் தொட்டி கட்டிக்கொள்ள வேண்டும். தொட்டியின் அடியில் கூழாங்கற்களைப் பரப்பி அதன்மேல் நைலான் வலையைப்போட்டு இழுத்துக்கட்டிக்கொள்ள வேண்டும். வலையின் மேல் 4 அங்குல உயரத்துக்கு மணலைக் கொட்டிப் பரப்பிக்கொள்ள வேண்டும். தொட்டிக்குள் தலா 5 கிலோ அளவு புளிய இலை, கறிவேப்பிலை, ஆவாரஞ்செடி, எருக்கன் இலை, கத்திரிச்செடி, சோற்றுக்கற்றாழை மடல் அல்லது துத்தி இலை, சவுக்கு இலை, கிளரிசீடியா இலை என ஏதாவது ஒரு வகைப் பூ ஆகியவற்றைப்போட்டு, தொட்டியில் 90 சதவிகிதக் கொள்ளளவுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்து 50 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைத் தொட்டிக்குள் ஊற்ற வேண்டும்.

10 கிலோ ஈரமான பசுமாட்டுச் சாணத்துடன் 1 கிலோ ‘சூடோமோனஸ்’ உயிர் உரத்தைக் கலந்து ஒரு கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று 10 கிலோ காய்ந்த பசு மாட்டுச் சாணத்துடன் 1 கிலோ ‘அசோஸ்பைரில்லம்’, 10 கிலோ எருமைச் சாணத்துடன் 1 கிலோ ‘பாஸ்போ பாக்டீரியா’, 10 கிலோ குதிரைச் சாணத்துடன் 1 கிலோ ‘டிரைக்கோ டெர்மா விரிடி’ ஆகியவற்றைக் கலந்து தனித்தனியான கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று 10 கிலோ ஆட்டு எரு, 10 கிலோ பன்றிச் சாணத்துடன் பிற உயிர் உரங்களைக் கலந்து தனித்தனியான கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆறு மூட்டைகளையும் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோலக் கட்டித் தொங்கவிட வேண்டும்.

தலா 10 கிலோ அளவு கனிந்த பப்பாளி, வாழை, மாம்பழம், சப்போட்டாப் பழங்கள் மற்றும் நிலத்தின் ஜீவனுள்ள மண் ஆகியவற்றைத் தனித்தனியாகக் கோணிச்சாக்கில் கட்டித் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோலக் கட்டித் தொங்கவிட வேண்டும். தலா 5 கிலோ அளவு தேங்காய் பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு, கொள்ளுமாவு ஆகியவற்றைத் தனித்தனியாகக் கோணிச்சாக்கில் கட்டித் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோல கட்டித் தொங்கவிட வேண்டும். இவையனைத்தும் ஒரு வாரம் ஊறினால் மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசல் தயார். 15 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் அளவு கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிடலாம். தொட்டியில் சேர்த்த பொருள்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தொட்டியில் கரைசலின் அளவு குறையக் குறைய 50 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி, அதோடு தொட்டி நிறையும் வரை தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

பிறகு, புதிதாக மூட்டைகளைப் போட்டு உருவாகும் கரைசலைத் தொடர்ந்து பயிர்களுக்குக் கொடுக்கலாம். இந்த மாதிரி தொட்டி கட்டி, தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். அரசு மண்புழு உரத்தொட்டி அமைப்பதற்கு மானியம் கொடுப்பதைப் போன்று, இந்தமாதிரி தொட்டிகள் கட்டவும் மானியம் கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

தலா ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடுபயிராக அரசாணி மற்றும் தம்புரா சுரைக்காய் ஆகியவற்றைச் சாகுபடி செய்யும் முறை குறித்துக் கோவிந்தராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

அரசாணி, சுரைக்காய் இரண்டுக்குமே சாகுபடி முறை ஒன்றுதான். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் 5 டன் தொழுவுரத்தைக் கொட்டி நன்கு உழுது ஆவணிப்பட்டத்தில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். அவற்றில் பூவெடுத்ததும் மடக்கி உழவுசெய்ய வேண்டும். பிறகு, கார்த்திகைப் பட்டத்தில் அரசாணி விதைகளை 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலில் மூழ்க வைத்து எடுத்து, நிழலில் உலர்த்தி விதைநேர்த்தி்செய்து நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 50 விதைகள் போதுமானவை. பரவலாக அரசாணி விதைகளை நடவு செய்து, தென்னை மரங்களுக்கு அமைத்துள்ள சொட்டுநீர்க் குழாய்களிலிருந்து அரசாணிக்கும் பாசன வசதி கிடைக்குமாறு வசதி செய்ய வேண்டும்.

விதைத்த 15, 30 மற்றும் 45-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 50-ம் நாளில் கொடிகள் மண் தெரியாத அளவுக்கு நிலம் முழுதும் படர்ந்துவிடும். மார்கழி மாதத்தில் பூ எடுக்கத்தொடங்கும்.

இந்த நேரத்தில் தேடி வரும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய்க் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். பிஞ்சு பிடிக்கும் சமயத்தில் காய்ப்புழுக்கள் தாக்குதலைச் சமாளிக்க இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும். 90-ம் நாளுக்குமேல் காய்கள் பெருத்து அறுவடைக்குத் தயாராகிவிடும். 2 கிலோ முதல் 3 கிலோ அளவு இருக்கும் காய்களை அறுவடை செய்யலாம்.”

தொடர்புக்கு :
கோவிந்தராஜன்,
செல்போன்: 99655 37403

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment