Sunday 11 March 2018

''பட்டுப்புழு வளர்ப்புக்குக் குறைந்தபட்சம் எவ்வளவு இடம் தேவை? மொட்டை மாடியில் அதை வளர்க்க முடியுமா?''


தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் பா.சத்தியமூர்த்தி பதில் சொல்கிறார்.

''வீட்டு மொட்டை மாடியாக இருந்தாலும் சரி, குடிசையாக இருந்தாலும் சரி... நல்ல காற்றோட்டமுள்ள இடமாக அது இருந்தால்... தாராளமாக பட்டுப்புழுக்களை வளர்க்கலாம். எதிரெதிராக ஜன்னல்களை அமைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பட்டுப்புழுக்களின் உணவான மல்பெரி இலைகளைப் பயிரிட குறைந்தபட்சம் அரை ஏக்கராவது வடிகால் வசதி கொண்ட நிலம் வேண்டும். அப்போதுதான் லாபகரமாக இத்தொழிலை செய்ய முடியும். நடவு செய்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இலைகளை அறுவடை செய்து புழுக்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலைகளை பால் மாடுகளுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது பாலின் அளவு கூடும். அதேசமயம், புழுக்களின் கழிவுகள் படிந்த மல்பெரி இலையை மாடு தின்றால், கழிச்சல் ஏற்படும். எனவே, தீவனம் கொடுக்கும்போது கவனம் தேவை.

பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு மானியமும் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் சொந்த நிலத்தில் மல்பெரி பயிரிட்டால், 4,125 ரூபாய் மானியமும், சொட்டு நீர்ப்பாசனத்துக்காக 15,000 ரூபாய் மானியமும் கிடைக்கும். தவிர, பட்டுப்புழு வளர்க்கும் கட்டடத்துக்கும் மானியம் உண்டு. 1,000 சதுர அடி வரை உள்ள கட்டடத்துக்கு 25,000 ரூபாயும், 1,500 சதுரடி வரை உள்ள கட்டடத்துக்கு 50,000 ரூபாயும், அதற்கு மேல் இருந்தால் 75,000 ரூபாயும் மானியமாகக் கிடைக்கிறது.

பட்டுப்புழு வளர்ப்பு அருமையானத் தொழில். இதை முறையாகக் கற்றுக் கொண்டால், நல்ல லாபம் பெறலாம். விவசாயத்துடன் கூடிய உபதொழிலாகவும் செய்யலாம். பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.''

தொடர்புக்கு : 
உதவி இயக்குநர், 
பட்டு வளர்ச்சித்துறை, 
8/52, பாலசுந்தரம் சாலை, 
கோவை-641 018. 
தொலைபேசி: 0422-2246948. 
அலைபேசி: 99527-27157.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment