Tuesday 20 March 2018

63 சென்ட்... 100 நாள்கள்... - நிறைவான லாபம் தரும் நிலக்கடலை!

“என் மகன்தான் என்னை இயற்கை விவசாயத்துக்கு மாத்தினான். அதுக்குக் காரணமா இருந்தது ‘பசுமை விகடன்’ புத்தகம்தான்” எனப் பெருமையாகச் சொல்கிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிக்கேல்ராஜ். இவரும் இவரின் மகன் அமுல்ராஜூம் இணைந்து இயற்கைமுறையில் நிலக்கடலை, காய்கறிகள் எனச் சாகுபடி செய்துவருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை எனும் ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகநாதபுரம் கிராமத்தில் மிக்கேல்ராஜின் தோட்டம் உள்ளது. நிலக்கடலையைக் காய வைத்துக்கொண்டிருந்த மிக்கேல்ராஜைச் சந்தித்துப் பேசினோம்.

“அப்பா, தாத்தா எல்லோருமே விவசாயம்தான் செஞ்சுட்டுருந்தாங்க. நான் மூணாம் வகுப்புக்குமேல பள்ளிக்கூடத்துக்குப் போகலை. அப்பாகூடச் சேர்ந்து விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சிட்டேன். கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, கொள்ளுனு மானாவாரியா சாகுபடி செஞ்சுட்டுருந்தோம். மாடுகளையும் வளர்த்துட்டுருந்தோம். அப்போதெல்லாம் எருவை மட்டும் செழிம்பா நிலத்துல கொட்டிப் பயிர் வெப்போம். நல்லா விளைச்சல் கிடைக்கும். முப்பது வருஷத்துக்கு முன்னாடி, ஊர்ல எல்லோரும் ரசாயன உரத்துக்கு மாற ஆரம்பிச்சாங்க. அதனால, நாங்களும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு தெளிச்சுத்தான் விவசாயம் செஞ்சுட்டுருந்தோம்.

என் மகன் அமுல்ராஜ்தான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாதுனு சொல்ல ஆரம்பிச்சான். அதுக்கு மாற்றா தொழுவுரம், இயற்கைப் பூச்சிவிரட்டி பயன்படுத்துங்கனு சொன்னான். தொடர்ந்து அவன் நச்சரிக்கவும், 52 சென்ட் நிலத்தை இயற்கை விவசாயத்துக்குனு ஒதுக்கினேன். அதுல செம்மறி ஆட்டுக்கிடை அடைச்சு சின்ன வெங்காயம் போட்டோம். என் மகன் சொல்லிக்கொடுத்த மாதிரியே பராமரிப்பு செஞ்சேன். அதுல நல்ல மகசூல் கிடைச்சது. அடுத்து பாசி, உளுந்து ரெண்டையும் இயற்கையில சாகுபடி செஞ்சப்பவும் நல்ல மகசூல் கிடைச்சது. தொடர்ந்து காய்கறிகளையும் இயற்கை விவசாயத்துல சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்” என்ற மிக்கேல்ராஜைத் தொடர்ந்து பேசினார் அமுல்ராஜ்.

“நானும் அப்பாகூட விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். முன்னாடி என்னோட நண்பரோட கடையில சாயங்கால நேரத்துல டீ மாஸ்டரா வேலை செஞ்சேன். அந்தக் கடையிலதான் பசுமை விகடன் புத்தகத்தைப் பார்த்துப் படிக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடம் படிக்கும்போதே எண்டோசல்பான், மோனோ குரோட்டோபாஸ் மாதிரியான பூச்சிக்கொல்லிகளால வர்ற தீமைகளைப் பத்திக் கேள்விப்பட்டுருக்கேன். அதையெல்லாம் அப்பாகிட்ட சொன்னா அவர் கேட்கவேயில்லை. அப்புறம் பசுமை விகடன்ல வர்ற மகசூல் கட்டுரைகளை ஆதாரமாகக் காட்டின பிறகுதான், அப்பா நம்ப ஆரம்பிச்சார்.

பசுமை விகடன் மூலமாத்தான், இயற்கை விவசாயப் பயிற்சிகள், இடுபொருள்கள் தயாரிப்புப் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டோம். அதுல வர்ற விவசாயிகள்கிட்ட போன்லயும் பேசிச் சந்தேகங்களைக் கேட்பேன். அப்போ ஒருத்தர், ‘வானகம்’ பண்ணையில பயிற்சி எடுத்துக்கச் சொன்னார். பிறகு அங்கு போய் மூணு நாள் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன். இப்போ மூணு வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம்.

மொத்தம் ரெண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. முழுக்கச் செவல் மண்தான். அதுல, 63 சென்ட் நிலத்துல நிலக்கடலை போட்டு அறுவடை செஞ்சாச்சு. ஐம்பது சென்ட் நிலத்துல மிளகாயை விதைச்சு, அதுல ஊடுபயிரா சின்ன வெங்காயத்தையும், கொத்தமல்லியையும் போட்டிருக்கோம். அஞ்சு சென்ட் நிலத்துல நாட்டுத்தக்காளியும் ஒரு ஏக்கர் நிலத்துல மக்காச்சோளமும் இருக்கு. மீதி நிலம் சும்மாதான் இருக்கு” என்ற அமுல்ராஜ் வருமானம் குறித்துச் சொன்னார்.

“முதல் முறை இயற்கை முறையில விளைய வெச்ச கடலையைக் கோவில்பட்டி மார்க்கெட்டுக்குக் கொண்டு போனோம். அங்க இயற்கை விளைபொருள்ங்கிறதுக்காகத் தனி விலை கிடைக்கலை. அதனால, அடுத்த தடவை தெரிஞ்சவங்களுக்கு நேரடியா விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். அதேமாதிரிதான் இப்போ காய்கறிகளையும் விற்பனை செய்றோம். போன வருஷம் உடைச்ச நிலக்கடலைப்பருப்பைக் கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். இந்தமுறை 63 சென்ட் நிலத்துல 612 கிலோ கடலை கிடைச்சது. அதை முழுக்கடலையா கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். இது மூலமா 36,720 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல நிலக்கடலைச் சாகுபடி செலவு 12,750 ரூபாய் போக 23,970 ரூபாய் லாபமாகக் கிடைச்சுருக்கு” என்றார்.

நிறைவாகப் பேசிய மிக்கேல்ராஜ் மற்றும் அமுல்ராஜ் ஆகியோர், “இந்த வருஷமும் பருப்பா விற்பனை செஞ்சிருந்தா கூடுதல் லாபம் கிடைச்சுருக்கும். ஆனா, வேலைகள் அதிகமா இருந்ததால அப்படியே விற்பனை செஞ்சுட்டோம். அடுத்து நாங்களே கடலை எண்ணெயா ஆட்டி விற்பனை செய்யலாம்னு இருக்கோம். இயற்கைக்கு மாறின பிறகுதான் நிலத்துல மண்புழுக்களையே பார்க்க முடியுது. அதைப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தனர்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தட்டைப்பயறு :

“நிலக்கடலையில் ஊடுபயிராக 7 அடி இடைவெளியில் தட்டைப்பயறை விதைச்சுருந்தோம். அதனால, கடலைக்கு வர்ற பூச்சிகள் தட்டைப்பயறுல உக்காந்து, கடலைச் செடிகள் பூச்சித்தாக்குதல் இல்லாம வளர்ந்துச்சு. தட்டைப்பயறை வீட்டுத்தேவைக்கு வெச்சுக்குவோம்” என்கிறார் மிக்கேல்ராஜ்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்..!

மானாவாரியாக நிலக்கடலைச் சாகுபடி செய்வது குறித்து அமுல்ராஜ் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

நிலக்கடலைக்குச் சித்திரை, வைகாசி, ஆடி, கார்த்திகை ஆகிய பட்டங்கள் ஏற்றவை என்றாலும், மானாவாரி முறைக்கு ஆடிப்பட்டம் சிறந்ததாக இருக்கும். தேர்வு செய்த நிலத்தை நன்கு புழுதி உழவு ஓட்டி, மூன்று நாள்கள் செம்மறி ஆட்டுக்கிடை அடைத்து, ஒரு மாதம் காயவிட வேண்டும். மழை கிடைத்த பிறகு, ஓர் உழவு செய்து முக்கால் அடி இடைவெளியில், விரலால் குழி பறித்துப் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்த விதைக்கடலையை ஊன்ற வேண்டும். விதைத்த எட்டு நாள்களுக்குள் விதைகள் முளைப்பு எடுத்துவிடும். 25-ம் நாள் களை எடுக்க வேண்டும். அன்றே 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து செடிகள் முழுவதும் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

35-ம் நாளுக்குமேல் பூவெடுக்க ஆரம்பிக்கும்.

45-ம் நாள் மீண்டும் ஒருமுறை களை எடுக்க வேண்டும். இந்தச் சமயத்தில் இலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் காணப்பட்டால், இலை ஒட்டு நோய் தாக்கியுள்ளது என்று அர்த்தம். இந்த நோய் தாக்கினால், மகசூல் குறையும். பத்து லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து செடிகள் முழுவதும் நனையுமாறு தெளித்தால், இந்த நோய் குணமாகும். இதே விகிதத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்தாலும் இந்நோய் குணமாகிறது.

50-ம் நாளுக்குமேல் கடலைச் செடிகளில் வேர் இறங்கும். இந்த நேரத்தில் சிவப்பு கம்பளிப்புழு மற்றும் அசுவினி பூச்சிகள் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கும். அதனால், செடிகளுக்கு மண் அணைத்துவிட்டு... 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

விதைத்த 65, 75 மற்றும் 85-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 100-ம் நாளுக்குமேல் சில செடிகளைப் பிடுங்கிப்பார்த்து, கடலை முதிர்ச்சி அடைந்ததைத் தெரிந்துகொண்டு அறுவடை செய்யலாம்.

விதைநேர்த்தி :

நிழலான இடத்தில் ஒரு சாக்கை விரித்து, அதில் 20 கிலோ விதைக் கடலையைக் கொட்ட வேண்டும். அவற்றின்மீது 1 லிட்டர் பஞ்சகவ்யாவைத் தெளித்து, அரைமணி நேரம் வரை உலர வைத்துப் பிறகு விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் பரப்பில் விதைக்க 30 கிலோ விதைக்கடலை தேவைப்படும். விதைநேர்த்தி செய்வதால் வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காது.

இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல் :

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக்கிலோ அளவு எடுத்து, உரலில் இடித்துப் பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். அதை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு 4 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி, 3 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு எடுத்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டிகள் என எதைத் தெளிப்பதாக இருந்தாலும், அதிகாலை அல்லது மாலை வேளைகளில்தான் தெளிக்க வேண்டும்.

மூலிகைப் பூச்சிவிரட்டி :

வேப்பிலை, கற்றாழை, எருக்கன் இலை, தும்பை இலை, நொச்சி இலை ஆகியவற்றில் தலா 2 கிலோ அளவு எடுத்துப் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் நறுக்கிய இலைகளைப்போட்டு அவை மூழ்கும் அளவுக்குப் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி, 3 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, இந்தக் கரைசலை வடிகட்டிப் பயன்படுத்தலாம்.

தொடர்புக்கு :
அமுல்ராஜ்,
செல்போன்: 97912 17598.



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment